`ஸ்டாலின் நடத்தியது மேஜிக் ஷோ, எடப்பாடியார் நடத்தியது ரியல் ஷோ' – சொல்கிறார் ஆர்.பி.உதயகுமார்

“ஸ்டாலின் நடத்திய ரோடு ஷோ மேஜிக் ஷோ, ஆனால், எடப்பாடியார் நடத்திய ரோடு ஷோ ரியல் ஷோ” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ஆர்.பி.உதயகுமார்

மதுரை கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, “மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்தில் 58 கிராம மக்களின் குடிநீர், வேளாண்மை, கால்நடை வளர்ப்பிற்கு ஜீவாதாரமாக இருப்பது 58 கால்வாய் திட்டம். இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை கனவுத் திட்டமான 58 கால்வாய் திட்டம் ஜெயலலிதா ஆட்சியிலும் அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்திலும் இத்திட்டத்தின் மதிப்பீட்டை ரூ 93 கோடியாக உயர்த்தி நிதி ஒதுக்கீடு செய்து ஆசிய கண்டத்திலேயே மிகவும் நீளமான 1.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு தொட்டி பாலத்துடன் 27.6 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் அமைக்கப்பட்டு திட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் காரணமாக 35 கண்மாய்களில் நீர் நிரப்பப்பட்டு 925 ஹேக்டேர் நிலங்களிலும் இரண்டு போக நெல் விளையும் பூமியாக மாறியது.

தற்போது வைகை அணையில் 69 அடிக்கு மேல் நீர் நிரம்பி, இரண்டு முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்ட பின்பும் 58 கால்வாயிலோ, திருமங்கலம் பிரதான கால்வாயிலோ தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் விவசாயப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. எனவே 58 கால்வாய் மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

ஆர்.பி.உதயகுமார்

எடப்பாடி பழனிசாமி செப்டம்பர் மாதம் 4 ஆம் கட்ட சுற்றுப்பயணத்தில் மதுரை வருகிறார். சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளுவதைப் போல மதுரை மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி புரட்சிப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்,

மதுரை மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை எடப்பாடியார் வழங்கியுள்ளார். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களைத்தான் ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறக்கிறார். 1,296 கோடியில் குடிநீர் திட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார், ஆனால் அத்திட்டம் நான்கரை ஆண்டுகாலமாகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை. மதுரை மாவட்டத்திற்கு ஸ்டாலின் அரசு எந்த வளர்ச்சித் திட்டங்களையும் செய்யவில்லை.

வளர்ச்சியில் மதுரை மாவட்டம் முதலிடம் இல்லாவிட்டாலும் ஊழலில் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளது. அதனால்தான் மாநகராட்சி ஊழல் விவகாரத்தில் மண்டலத் தலைவர்களை ராஜினாமா செய்யச் சொல்லவேண்டிய சூழல் முதலமைச்சருக்கு ஏற்பட்டுள்ளது. கோயில் மாநகரமாக இருந்த மதுரையை ஊழல் மாநகராக மாற்றியது தான் திமுக செய்த சாதனையாகும்.

திமுக ஆட்சியைப் பார்த்து எடப்பாடி பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல் என்று ஸ்டாலின் கூறுகிறார். எழுச்சிப் பயணத்தில் எடப்பாடியார் யாரையும் தவறாகப் பேசவில்லை, ஆதாரத்துடன் தான் பேசி வருகிறார். எழுச்சிப் பயணத்தை குறைவாக மதிப்பிட்டவர்களுக்கு இன்றைக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதிலும் எடப்பாடியாருக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பைப் பார்த்து ஸ்டாலினுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

ஆர்.பி.உதயகுமார்

திமுக ஆட்சியில் நூறு நாள் வேலைத்திட்டம் ஐந்து நாள் வேலை திட்டமாக மாறியுள்ளது, பணியாளர்களுக்கு ஆறு மாதமாக ஊதியம் வழங்கவில்லை, இத்திட்டத்துக்கு மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெற முடியாமல் ஸ்டாலின் இருந்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சரிடம் எடுத்துரைத்து ரூ 2,999 கோடியை பெற்றுத் தந்தார்.

ஸ்டாலின் நடத்திய ரோடு ஷோ மேஜிக் ஷோ, ஆனால், எடப்பாடியார் நடத்திய ரோடு ஷோ ரியல் ஷோ. எடப்பாடியார் ‘ரியல் மேன்’ ஆக செயல்பட்டு தமிழகத்தில் ‘அயர்ன் மேன்’ஆக வலம் வருகிறார், கடுமையான சவால்களுக்கிடையே அதிமுகவிற்கு உயிர் கொடுத்து எடப்பாடியார் தன்னை வருத்திக்கொண்டு புரட்சிப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

தமிழக மக்களின் உள்ளங்களில் தெய்வமாக வாழும் எம்.ஜி.ஆர் குறித்து திருமாவளவன் கூறிய கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது.

திமுக ஆட்சியின்போது நடைபெற்ற தேர்தல்களில் தில்லு முல்லு நடைபெற்றுள்ளது, திமுக ஆட்சியில் தான் பிணங்கள் கூட வாக்களிக்கிறது, கூட்டுறவு சங்கத் தேர்தல், உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல், சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல்களில் திமுக பல தில்லுமுல்லுகளை செய்துள்ளது. தேர்தலை குறுக்கு வழியில் சந்திப்பது திமுகவிற்கு கைவந்த கலை. திருமங்கலம் ஃபார்முலாவை உருவாக்கிய திமுக, எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறுகளை துரைமுருகன் தெரிவிக்கக்கூடாது.

இந்திய அளவில் தமிழகம் பல்வேறு வளர்ச்சிகளைப் பெற பசி, பட்டினி இல்லாத மாநிலமாக, கல்வி வளர்ச்சியில் முன்னோடி மாநிலமாக திகழ்வதற்கு அதிமுக உருவாக்கிய கட்டமைப்புதான் காரணம். கடந்த 75 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் சுமை ஐந்து லட்சம் கோடிதான், ஆனால், கடந்த நான்கரை ஆண்டு காலம் நான்கரை லட்சம் கோடி கடனை திமுக அரசு வாங்கியுள்ளது.

திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தவே 2026-ல் திமுக கூட்டணி வெற்றிபெறும் என முதல்வர் பேசி வருகிறார். மக்கள் எழுச்சியை மறைக்க முடியாது, 2026 ல் திமுக வெற்றி பெற முடியாது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.