சமீபத்தில் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொடரை 2-2 என்று சமன் செய்துள்ளது. அடுத்ததாக ஆசிய கோப்பை 2025 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில், அதிரடி மாற்றங்களை செய்ய பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் முக்கிய அம்சமாக, இளம் வீரர் சுப்மன் கில் மீண்டும் இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக டி20 உலக கோப்பையில் சிறப்பாக விளையாடிய ஆல்-ரவுண்டர் அக்சர் படேலின் இடம் அணியில் கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் இது இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால தலைமை குறித்த ஒரு தெளிவான செய்தியையும் வெளிப்படுத்துகிறது.
மேலும் படிங்க: இந்த 3 வீரர்களுக்கு இனி டெஸ்ட் அணியில் வாய்ப்பு இல்லை! பிசிசிஐ அதிரடி!
மீண்டும் டி20 அணியில் கில்?
சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணிக்கு கேப்டனாக சுப்மன் கில் பொறுப்பேற்றார். தனது முதல் கேப்டன்சி தொடரிலேயே, 10 இன்னிங்ஸ்களில் 754 ரன்களை குவித்து, ஒரு தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்து உள்ளார். அவரது சிறப்பான பேட்டிங் மற்றும் தலைமை பண்பால், இந்திய அணி 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. இந்த அபாரமான செயல்பாட்டின் மூலம், தேர்வுக்குழுவின் நம்பிக்கையை கில் பெற்றுள்ளார். இதன் விளைவாக, 2026 டி20 உலக கோப்பைக்கு முன் மீண்டும் டி20 அணியின் துணை கேப்டனாக கில்லை நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அக்சர் படேலுக்கு சிக்கல்?
சுப்மன் கில் டி20 அணிக்குள் வந்தால் டாப்-ஆர்டர் பேட்ஸ்மேனாக தான் வருவார். இதனால் ஆடும் லெவனில் ஒரு வீரரை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். மேலும், துணை கேப்டன் பொறுப்பும் அவருக்கு வழங்கப்படுவதால், அணியில் அவரது இடம் உறுதி செய்யப்படுகிறது. இந்த சூழ்நிலையில், ஆல்-ரவுண்டரான அக்சர் படேல் அணியில் இருந்து நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. கடந்த சில தொடர்களில் அக்சர் படேல் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், அணியின் கட்டமைப்பை சமநிலைப்படுத்தும் நோக்கில், இந்த கடினமான முடிவை எடுக்க தேர்வாளர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. சுப்மன் கில்லின் வருகை, பேட்டிங் வரிசையை வலுப்படுத்தும் அதே வேளையில், சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டருக்கான இடத்தை கேள்விக்குறி ஆக்கி உள்ளது.
ரோஹித் சர்மாவுக்கு பின்னடைவு?
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஒரு மறைமுக பின்னடைவாகவே இது பார்க்கப்படுகிறது. ரோஹித் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுப்மன் கில் டெஸ்ட் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். ஒரு வெற்றிகரமாக கேப்டனாகவும் தன்னை தயார்படுத்தி கொண்டுள்ளார். இப்போது, டி20 அணியிலும் கில்லுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதால், அடுத்ததாக ஒருநாள் அணியின் கேப்டன் பதவியும் அவருக்கு வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இது இந்திய அணி, ரோஹித்-கோலி சகாப்தத்திலிருந்து அடுத்த தலைமுறைக்கு மாறுவதை குறிக்கிறது. ரோஹித் சர்மா போன்ற அனுபவமிக்க வீரர் அணியில் இருந்தாலும், தலைமை பொறுப்புகள் படிப்படியாக இளம் வீரர்களுக்கு கைமாற்றப்படுவது, ஒரு புதிய கட்டத்தின் தொடக்கமாகும்.
மேலும் படிங்க: பெங்களூருவில் புதிய கிரிக்கெட் மைதானம்.. சின்னசாமி ஸ்டேடியத்திற்கு குட்-பை.. கர்நாடக அரசு அதிரடி!