Asia Cup 2025: ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி மற்றும் துபாயில் வரும் செப். 9ஆம் தேதி தொடங்குகிறது. செப். 28ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 அணிகள் ஏ பிரிவிலும்; இலங்கை, ஹாங் காங், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் பி பிரிவிலும் இடம்பிடித்துள்ளன.
இந்திய அணி கடைசியாக பிப்ரவரி மாதம் டி20ஐ போட்டியை விளையாடியது. அதன்பின் சாம்பியன்ஸ் டிராபி, ஐபிஎல் தொடர், இங்கிலாந்து டெஸ்ட் தொடர் என சுமார் 6 மாதங்களுக்கு பிறகு தற்போது டி20ஐ போட்டிகளில் விளையாட இருக்கிறது. வரும் 2026ஆம் ஆண்டில் இந்தியாவில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருப்பதால், உலகக் கோப்பையை தக்கவைக்க இந்திய இந்த ஆசிய கோப்பையில் இருந்து முழு வீச்சில் செயல்பட வேண்டும். அடுத்தடுத்து தென்னாப்பிரிக்கா உடனான தொடர், ஆஸ்திரேலியா உடனான தொடர் உள்ளிட்டவை காத்திருக்கின்றன.
தற்போது டி20ஐ அணியில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். கடந்த 2024இல் ரோஹித் சர்மா டி20ஐ ஃபார்மட்டில் இருந்து ஓய்வை அறிவித்த பின் சூர்யகுமார் யாதவ் கேப்டன்ஸியை பெற்றார். ஐபிஎல் தொடர் நிறைவடைந்ததும் அவர் குடலிறக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டு தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். ஆசிய கோப்பைக்கு முன் அவர் முழுமையாக உடற்தகுதியை நிரூபிப்பாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை. பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள அவர் தனது உடற்தகுதி பரிசோதனையை அடுத்த வாரம் மேற்கொள்வார் என கூறப்படுகிறது.
இதனிடையே ஷ்ரேயாஸ் ஐயரின் டி20ஐ வருகையும் உறுதியாகி உள்ளது. இவர் கடைசியாக 2023ஆம் ஆண்டில் டி20ஐ போட்டியில் விளையாடியிருந்தார். அவரது சமீபத்திய ஐபிஎல் ஃபார்ம் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த ஜூலை 27 – ஜூலை 29 தேதிகளில் பெங்களூரு என்சிஏவில் தனது உடற்தகுதியை நிரூபித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் அவர் துலீப் டிராபி மற்றும் ஆசிய கோப்பை தொடரில் விளையாட ரெடியாகிவிட்டார் எனலாம்.
அடுத்து ஹர்திக் பாண்டியாவின் ஃபிட்னஸ்தான் அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்றாக உள்ளது. ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடருக்கு பின் நீண்ட ஓய்வில்தான் இருக்கிறார். இச்சூழலில், புதிய சுற்றுப்பயணம் தொடங்கும் முன் வீரர்கள் என்சிஏவில் உடற்தகுதியை நிரூபிப்பது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில், ஹர்திக் பாண்டியா உடற்தகுதி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உடற்தகுதியை நிரூபித்தால் மட்டுமே ஆசிய கோப்பையில் வாய்ப்பு கிடைக்கும். ஹர்திக் பாண்டியா என்சிஏவில் இருப்பது நேற்றைய அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் தெரியவருகிறது.
மேலும் படிக்க | அக்சர் படேலுக்கு நடக்கும் அநீதி! பிசிசிஐ இப்படி பண்ணலாமா? ரசிகர்கள் கோபம்!
மேலும் படிக்க | விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு பிசிசிஐ வைத்த நிபந்தனை! விரைவில் ஓய்வு பெற திட்டம்
மேலும் படிக்க | ஆசிய கோப்பையில் இடம் பெரும் 4 மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்! யார் யாருக்கு வாய்ப்பு?