வாஷிங்டன்,
அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: சிந்து நதியின் குறுக்கே இந்தியா அணை கட்டட்டும் என்றுதான் நாங்கள் காத்திருக்கிறோம். அணை கட்டினால், 10 ஏவுகணைகளால் அதை அழிப்போம். சிந்து நதி இந்தியர்களின் குடும்ப சொத்து அல்ல. எங்களிடம் ஆயுதப் பற்றாக்குறை ஏதுமில்லை” என்றார்.
மேலும், எதிர்காலத்தில் ‘இந்தியாவிடமிருந்து அச்சுறுத்தல் உலகின் பாதி நாடுகளை அழித்துவிடுவோம் என்ற தொனியிலும் பாகிஸ்தான் ராணுவ தளபதி பேசியுள்ளார். ஏற்கனவே வரிவிதிப்பால் இந்தியா – அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் சூழலில் அமெரிக்க மண்ணில் இருந்தவாறு இந்தியாவுக்கு பாகிஸ்தான் தளபதி மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து, பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்ட முடிவு செய்த இந்தியா, அந்த நாட்டுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. இதனால் அரண்டு போன பாகிஸ்தான் இந்தியாவுக்கு ஏதிராக ஆத்திரமூட்டும் வகையில் கருத்துகளை கூறி வருவது குறிப்பிடத்தக்கது.