பெங்களூரு,
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகாவில் பந்திப்பூர் வனச்சரணாலயம் உள்ளது. இந்த வனச்சரணாலயம் வழியாக மைசூரு-ஊட்டி நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையை அடிக்கடி வனவிலங்குகள் கடந்து செல்வது வழக்கமாக கொண்டுள்ளன.
மேலும் சாலையோரம் நடமாடும் காட்டு யானைகள், சிறுத்தை, காட்டெருமைகளை வாகனங்களில் வருவோர் ஆபத்தை உணராமல் வாகனங்களை நிறுத்தி இறங்கி செல்போனில் படம் பிடித்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று மாலை மைசூரு-ஊட்டி நெடுஞ்சாலையில் பந்திப்பூர் கெக்கனஹல்லா பகுதியில் காட்டு யானை ஒன்று சுற்றியது. பின்னர் அந்த யானை சாலையின் குறுக்கே நின்று வாகனங்களை வழிமறித்தது. இதனால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை அப்படியே நிறுத்தி வேடிக்கை பார்த்தப்படி இருந்தனர்.
அந்த சமயத்தில் கேரளாவை சேர்ந்த ஒருவர் தனது குடும்பத்தினருடன் காரில் அந்த வழியாக வந்துள்ளார். அந்த நபர் திடீரென்று காரில் இருந்து இறங்கி சென்று காட்டு யானையை செல்போனில் படம்பிடித்தார். மேலும் செல்பி படம் எடுக்க யானையின் அருகில் செல்ல முயன்றார். அதே சமயத்தில் ஒரு கார் யானையை கடந்து செல்ல முயன்றது.
அப்போது திடீரென்று ஆக்ரோஷம் அடைந்த காட்டு யானை காரை தும்பிக்கையால் தாக்கியதுடன், மிரண்டு ஓடி செல்போனில் படம் பிடித்தவரை துரத்தியது. அவரும் யானையிடம் சிக்காமல் இருக்க சாலையோர புதர் பகுதியில் ஓடினார். பின்னர் அவர் சாலையில் ஓடிய போது கால் தவறி விழுந்தார்.
இதையடுத்து அந்த நபரை யானை தனது முன்னங்காலால் படார் என மிதித்தது. இதில் அவரது தலை சாலையில் மோதியது. அதன்பிறகு யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதனை நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. சிலர் அய்யோ… அம்மா… என அச்சத்தில் அலறினர். யானை தாக்கியதில் அந்த நபர் பலத்த காயம் அடைந்திருந்தார். பின்னர் அவரை, உடன் வந்தவர்கள் காரில் தூக்கிக் கொண்டு சென்றுவிட்டனர்.
இதுகுறித்து பந்திப்பூர் வனச்சரணாலய உதவி வனப்பாதுகாவலர் நவீன்குமார் கூறுகையில், ஏற்கனவே வனப்பகுதி சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் இருந்தால், அதனை தொந்தரவு செய்யக் கூடாது என்றும், வாகனங்களை நிறுத்த கூடாது எனவும் அறிவுறுத்தி வருகிறோம். தற்போது செல்போனில் படம் பிடிக்க முயன்ற நபரை யானை தாக்கியுள்ளது. ஆனால் அந்த நபர் யார்? என்பது தெரியவில்லை.
நாங்களும் குண்டலுபேட்டை பகுதியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் யானை தாக்கி காயம் அடைந்த நபர் சிகிச்சைக்கு வந்தாரா என விசாரித்தோம். ஆனால் அதுபற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. காயமடைந்தவர் கேரளாவை சேர்ந்தவர் என்பதால், அங்கே சென்று இருக்கலாம். அந்த நபர் யார் என்பது பற்றி விசாரித்து வருகிறோம் என்றார்.
இதற்கிடையே செல்போனில் படம் பிடிக்க முயன்ற நபரை காட்டு யானை துரத்திச் சென்று தாக்கியதை வாகன ஓட்டி ஒருவர் வீடியோவாக தனது செல்போனில் பதிவு செய்திருந்தார். அந்த வீடேியா சமூக வலைதளங்களில் வைரலாகி காண்போரின் நெஞ்சை பதறவைக்கிறது.