சென்னை,
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரர்களில் ஒருவர் சஞ்சு சாம்சன். டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காராக ஆடி வரும் அவர் இந்திய முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினின் யூடியூப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.
அந்த சமயத்தில் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான சஞ்சு சாம்சனிடம் அஸ்வின் ‘கூலி’ திரைப்படம் வெளியாவது குறித்து கேட்டார். அதற்கு பதிலளித்த சாம்சன், “எப்போதெல்லாம் சோர்வாக இருக்கிறேனோ, அப்போதெல்லாம் ரஜினியின் பாடல்களை பார்ப்பேன். பேட்ட படத்தின் பாடல்கள் மிகவும் பிடிக்கும். எப்போதும் முதல் நாள் அன்றே அவருடைய படத்தை பார்த்து விடுவேன்.
ஒரு முறை நாங்கள் அயர்லாந்துக்கு கிரிக்கெட் விளையாட சென்றிருந்தோம். நாளை ரஜினி படம் ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் நாளை மறுநாள் எனக்கு போட்டி இருந்தது. படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்பதற்காக நானே தனியாக சென்று டப்ளினில் திரையரங்கு எங்கு இருக்கிறது என்று தேடி அங்கு ரஜினி படம் ஓடுகிறதா என்பதை கண்டுபிடித்து பார்த்துவிட்டு வந்தேன். அவருடைய அடுத்த படத்தை (கூலி) பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்” என்று கூறினார்.