காசா சிட்டி,
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக, காசாவுக்கு எதிராக இஸ்ரேல் போரில் இறங்கியது.
20 மாதங்களுக்கும் மேலாக நடந்து வரும் போரில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியானார்கள். எனினும், போரை நிறுத்தி வைக்க போர்நிறுத்த ஒப்பந்தம் உதவியாக அமைந்தது. ஆனால், மார்ச் 1-ந்தேதியுடன் முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்த சூழலில், 2-வது கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதனால் பணய கைதிகள் மீட்புக்காக, காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், காசா சிட்டியில் உள்ள அல்-ஷிபா மருத்துவமனையின் முக்கிய வாசலுக்கு வெளியே அமைக்கப்பட்டு இருந்த கூடாரம் மீது இன்று தாக்குதல் நடந்தது. அந்த கூடாரத்தில், பத்திரிகையாளர்கள் தங்கியிருந்தனர்.
அந்த பகுதியில் நடந்த இஸ்ரேலின் ஆளில்லா விமான தாக்குதலில் அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல், தாக்குதலில் அல் ஜசீரா செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர்களான அனாஸ் அல்-ஷரீப், முகமது கிரெய்க் மற்றும் புகைப்பட நிருபர்களான இப்ராகிம் ஜாகிர், மோவாமென் அலிவா மற்றும் முகமது நவுபால் ஆகியோர் பலியானார்கள்.
இவர்கள் தவிர, முகமது அல்-கால்தி என்ற உள்ளூர் நிருபர் ஒருவரும் பலியானார். இதே தாக்குதலில், 3 பத்திரிகையாளர்கள் காயமடைந்தனர் என அல் ஜசீரா தெரிவிக்கின்றது. இந்த சம்பவத்திற்கு சர்வதேச சமூகம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இந்த தாக்குதலுக்கு அமெரிக்க-இஸ்லாமிய உறவுகளுக்கான கவுன்சில் கண்டனம் தெரிவித்து உள்ளது. பாலஸ்தீனியர்களுக்காக ஆதரவுடன் நிற்க வேண்டும் என அமெரிக்கா மற்றும் சர்வதேச ஊடக பணியாளர்களை கேட்டு கொண்டுள்ளது.
ஐ.நா. அமைப்பும், பத்திரிகையாளர்கள் 6 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனங்களை வெளியிட்டு உள்ளது. ஐ.நா. அமைப்பில் உள்ள பாலஸ்தீனிய இயக்கம், ஈரான் வெளியுறவு அமைச்சகம், கத்தார் பிரதமர் சார்பிலும் இஸ்ரேலுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அல் ஜசீரா ஊடக நெட்வார்க் சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
காசாவில், 2023-ம் ஆண்டு முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 269 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். பத்திரிகையாளர்கள் படுகொலையில் இது மிக அதிகம் என அல் ஜசீரா தெரிவித்து உள்ளது.