ருத்ரபிரயாக்,
இமயமலையில் 11 ஆயிரம் அடி உயரத்தில் கடவுள் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கேதர்நாத் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு கோவிலை அடைந்து, சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்து மதத்தினரின் முக்கியத்துவம் வாய்ந்த இந்த கேதர்நாத் யாத்திரை, நடப்பு ஆண்டில் கடந்த மே 2-ந்தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில் உத்தரகாண்டின், ருத்ரபிரயாக் மாவட்டத்தில் 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரையிலான 3 நாட்களுக்கு கனமழை பெய்ய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்து உள்ளது.
இதேபோன்று, அரித்துவார், டேராடூன், தெஹ்ரி, பாவ்ரி, நைனிடால் மற்றும் பிற மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய கூடும். அதனால் ரெட் அலர்ட் எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. இதனை முன்னிட்டு, அரசு நிர்வாகம் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
ரெட் அலர்ட் எதிரொலியாக கேதர்நாத் யாத்திரை 3 நாட்களுக்கு தற்காலிக நிறுத்தம் செய்யப்படுகிறது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும், வானிலைக்கு ஏற்ப பயண திட்டமிடலை மேற்கொள்ளவும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.