MS Dhoni : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, ஐபிஎல் 2026ல் விளையாடுவாரா?, இல்லை ஓய்வு பெறுவாரா? என்ற கேள்வி இப்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதற்கு காரணம், அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய தோனி, முழங்கால் வலியால் அவதிப்படுவதாகவும், அதனால் என்னால் இப்போதைக்கு எதையும் சொல்ல முடியாது என பதிலளித்ததே இந்த யூகங்களுக்கு காரணமாகிவிட்டது. தோனியைப் பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாகவே முழங்கால் வலியால் அவதிப்பட்டு வருகிறார். ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை கூட இதற்கு எடுத்துக்கொண்டார். ஆனால் முழுமையான நிவாரணம் அவருக்கு கிடைக்கவில்லை.
’விரைவில் தோனி ஓய்வு பெறப்போகிறார்’
இந்த சூழலில் தான் கடந்த சில ஆண்டுகளாகவே அவரை சுற்றி ’விரைவில் தோனி ஓய்வு பெறப்போகிறார்’ என்ற தகவல் வட்டமடித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக ஐபிஎல் ஏலம் நடக்கும் ஒருசில மாதங்களுக்கு முன்பு இருந்து ஐபிஎல் தொடர் முடியும் வரை, அதுவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கடைசி போட்டி வரை தோனி ஓய்வு குறித்த தகவல்கள் வட்டமடிப்பது வழக்கமாகிவிட்டது. அதைப்போலவே இந்தாண்டும் தகவல்கள் இப்போதே வெளியாகத் தொடங்கியிருந்தாலும் தோனியின் நடவடிக்கைகள் அதனை உறுதிப்படுத்தும் விதமாக இருப்பது, வரும் ஐபிஎல் தொடருடன் அவர் முழுமையாக கிரிக்கெட் களத்தில் இருந்து விலகுவதை ஊர்ஜிதப்படுத்துவது போல் இருக்கிறது.
எம்எஸ் தோனி பேட்டி
ஏனென்றால், அண்மையில் பேட்டி ஒன்றில் தோனி பேசும்போது முழங்கால் வலி காரணமாக தோனி ஐபிஎல் 2026 முழுவதுமாக விளையாட வாய்ப்பில்லை என்பது போலவே பேசினார். அதாவது, வரும் ஐபிஎல் தொடரில் முழுமையாக விளையாட வேண்டும் என ரசிகர் ஒருவர் கோரிக்கை வைத்தார். அதற்கு பதில் அளித்த தோனி, ’ என்னுடைய முழங்கால் வலியை யார் பொறுத்துக் கொள்வது என கேட்டார்?’ என சிரித்துக் கொண்டே பதில் கேள்வி கேட்டார். மேலும், ” இன்னும் 5 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடுவதற்கு கண்கள் ஒத்துழைப்பு அளிக்கும் என மருத்துவர்கள் கூறியிருந்தாலும், முழங்கால் அதற்கு ஒத்துழைக்குமா என தெரியவில்லை. முழு உடல் தகுதியுடன் இருந்தால் மட்டுமே வரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவேன்” என எம்எஸ் தோனி தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த கருத்துகளே தோனி வரும் ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறப்போகிறார் என்பதை ஊர்ஜிதப்படுகிறது. தோனி ரசிகர்களும் இதை நோட் செய்து கொண்டு, அவர் ஐபிஎல் விளையாட வேண்டும் என கோரிக்கைகளை சமூகவலைதளத்தில் தட்டிவிடுகின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால், நான் எந்த சமூக ஊடகத்திலும் இல்லை, அதைப் பயன்படுத்துவதும் இல்லை, சமூக ஊடகங்களில் இருப்பது எனக்கு பிடிக்காது, அது நேர விரயமே தவிர, அதனால் எந்த பயனும் இல்லை” என அதே பேட்டியில் தோனி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் நிர்வாகத்தின் ரியாக்ஷன்
ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே தோனி முடிவெடுத்திருந்தாலும், ஐபிஎல் தொடரை சுற்றியிருக்கும் பிஸ்னஸ் காரணமாக தோனி தொடர்ச்சியாக விளையாட வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாக கூட தகவல்கள் தெரிவிக்கின்றன. தோனி சில நொடிகள் களத்துக்கு வந்தாலே தொலைக்காட்சி உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைப்பதாலும், விளம்பரங்கள் மூலம் அதிக வருவாய் கிடைப்பதாலும், தோனி ஓய்வு பெறுவதை தள்ளிப்போடுமாறு கேட்டுக்கொள்ளபட்டதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன. ஐபிஎல் தொடரை சுற்றி நடக்கும் பிஸ்னஸை பார்க்கும்போது இந்த தகவல்கள் உண்மையாக இருக்கக்கூட வாய்ப்புள்ளது என கிரிக்கெட் நிபுணர்களும் கூறுகின்றனர்.
மேலும் படிங்க: இந்த ஒரு காரணத்திற்காக தான் சஞ்சு சாம்சன் RR அணியை விட்டு வெளியேறுகிறாரா?
மேலும் படிங்க: சிஎஸ்கே அணியில் தோனியின் இடத்தை பிடிக்க போதும் 5 வீரர்கள்! யார் தெரியுமா?
About the Author
S.Karthikeyan