சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் முதுகெலும்பாக இருக்கும் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி ஐபிஎல் 2026ல் விளையாடுவாரா? மாட்டாரா? என்பது குறித்து நிச்சயமற்ற தன்மை நீடித்து வருகிறது. அவர் அடுத்த சீசனில் விளையாடுவாரா அல்லது தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பு அவர் தனது முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது முழங்கால் பிரச்சனையும் இதற்கு ஒரு காரணம். ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியின் எதிர்காலம் குறித்த இந்த விவாதம் சூடுபிடித்துள்ள நிலையில், தோனியின் இடத்தை நிரப்பக்கூடிய ஐந்து விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்கள் குறித்து பார்ப்போம்.
சஞ்சு சாம்சன்
ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனை, டிரேடிங் மூலம் சிஎஸ்கே அணிக்குள் கொண்டு வர நிர்வாகம் விரும்புவதாக நீண்ட காலமாக ஒரு பேச்சு அடிபடுகிறது. சாம்சனின் அதிரடி பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் திறன்கள், தோனியின் இடத்தை நிரப்ப உதவும். மேலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்திய அவரது கேப்டன்சி அனுபவம், சிஎஸ்கே அணியின் தலைமை பொறுப்பை ஏற்க அவரை ஒரு சிறந்த தேர்வாக காட்டுகிறது. ஒருவேளை சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு மாறினால், தோனியின் சகாப்தத்திலிருந்து ஒரு சுமூகமான மாற்றத்தை அவரால் வழங்க முடியும்.
உர்வில் படேல்
குஜராத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான உர்வில் படேல், ஐபிஎல் 2025 தொடரின் பாதியில், காயம் காரணமாக விலகிய வன்ஷ் பேடிக்கு மாற்று வீரராக சிஎஸ்கே அணியில் இணைந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு எதிராக விளையாடிய போட்டிகளில், தனது அதிரடியான பேட்டிங் திறனை வெளிப்படுத்தினார். கடந்த சையத் முஷ்டாக் அலி டிராபியிலும் சிறப்பாக விளையாடிய இவரை, சிஎஸ்கே அணி மினி ஏலத்திற்கு முன்பு தக்க வைத்துக் கொண்டால், தோனி ஓய்வு பெற்ற பிறகு அவரது இடத்திற்கு ஒரு சிறந்த மாற்றாக இவர் கருதப்படுவார்.
ரஹ்மானுல்லா குர்பாஸ்
ஆப்கானிஸ்தானை சேர்ந்த அதிரடி வீரரான ரஹ்மானுல்லா குர்பாஸை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மினி ஏலத்திற்கு முன்பு விடுவிக்க வாய்ப்புள்ளது. விக்கெட் கீப்பிங்கில் குயின்டன் டி காக்கை அவர்கள் தக்கவைத்து கொள்ளும் பட்சத்தில் குர்பாஸ் ஏலத்திற்கு வருவார். இது சிஎஸ்கே அணிக்கு ஒரு பொன்னான வாய்ப்பாக அமையும். தனது அதிரடி பேட்டிங் மற்றும் விக்கெட்டுகளுக்கு பின்னால் காட்டும் அசாத்திய வேகம் ஆகியவற்றால் அறியப்படும் குர்பாஸ், சிஎஸ்கேவின் பேட்டிங் வரிசை மற்றும் கீப்பிங் திறனை வலுப்படுத்த ஒரு சிறந்த தேர்வாக இருப்பார்.
இஷான் கிஷன்
தோனியின் சொந்த மாநிலமான ஜார்கண்டை சேர்ந்த இஷான் கிஷன், தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் 2025 சீசனில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் உட்பட 354 ரன்கள் எடுத்திருந்தாலும், அவரை ஏலத்தில் விடுவிக்க அல்லது டிரேடிங் செய்ய SRH அணி திட்டமிடலாம். ஒருவேளை சிஎஸ்கே, ஏலத்திலோ அல்லது டிரேடிங் மூலமாகவோ கிஷானை அணிக்குள் கொண்டு வந்தால், தோனியின் இடத்தை நிரப்பக்கூடிய மற்றொரு சிறந்த வீரர் கிடைப்பார். தோனியின் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால், ரசிகர்களிடையேயும் அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கும்.
நாராயண் ஜெகதீசன்
கோயம்புத்தூரை சேர்ந்த தமிழ்நாட்டு வீரரான நாராயண் ஜெகதீசன், ஏற்கனவே 2020 முதல் 2022 வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர். அதன் பிறகு கொல்கத்தா அணிக்கு மாறினார். உள்ளூர் திறமைகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டும் சிஎஸ்கே, மீண்டும் ஜெகதீசனை அணிக்குள் கொண்டு வர பரிசீலிக்கலாம். அணியின் சூழல் மற்றும் கலாச்சாரத்தை நன்கு அறிந்தவர் என்பதும், உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருவதும் அவருக்குக் கூடுதல் பலமாகும்.
About the Author
RK Spark