இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற சுப்மன் கில் தனது முதல் கேப்டன்சி தொடரிலேயே அசத்தலான சாதனை புரிந்து, ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில், இந்திய அணி கடுமையான சவால்களை எதிர்கொண்டு 2-2 என்ற சம நிலைக்குக் கொண்டு வந்தது பெரும் பாராட்டை பெற்றுள்ளது.
இந்திய அணியில் பல மூத்த வீரர்கள் இல்லாத சூழ்நிலையில், சுப்மன் கில் இளம் வீரர்களை வழிநடத்திய விதத்தை ரசிகர்களும், முன்னாள் கிரிக்கெட் நிபுணர்களும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக, பேட்டிங்கிலும், கேப்டன்சியிலும் அவர் வெளிப்படுத்திய திறமை, தொடரை சமன் செய்ய ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
சுப்மன் கில் – தொடரின் புள்ளிவிவரங்கள்:
– மொத்தம் 10 இன்னிங்ஸில் 754 ரன்கள்
– 4 சதங்கள், அதில் 1 இரட்டை சதமும் அடக்கம்
– பர்மிங்ஹாம் டெஸ்டில் ஆடிய மறக்க முடியாத இரட்டை சதம்
– தொடரின் போது ஐசிசி ஜூலை மாத சிறந்த வீரர் விருது
இதன் மூலம் வெளிநாட்டில் (வெளிநாட்டு மைதானங்களில்) பெரிய இன்னிங்ஸ் ஆடமாட்டார் என்ற விமர்சனங்களுக்கு, கில் நேரடி பதிலடி கொடுத்துள்ளார். அவரது பேட்டிங் ஆட்டம் மட்டுமின்றி, திட்டமிடப்பட்ட கேப்டன்சியும், அணியை அழுத்தமான நேரங்களில் கையாண்ட விதமும், தொடரை சமநிலையில் முடிக்க முக்கிய பங்காற்றியது.
சுப்மன் கில் நெகிழ்ச்சி
விருதை பெற்ற பிறகு பேசிய அவர், “ஜூலை மாதத்திற்கான ஐசிசி விருதை பெற்றதில் மகிழ்ச்சி. கேப்டனாக நான் பொறுப்பேற்ற முதல் தொடரிலேயே இந்த அங்கீகாரம் கிடைத்தது மேலும் மகிழ்ச்சி அளிக்கிறது. பர்மிங்ஹாம் டெஸ்டில் அடித்த இரட்டை சதம் என்னுடைய நினைவில் என்றும் நிற்கும். அது மறக்க முடியாதது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்குமே இந்த தொடர் நீண்ட நாட்கள் நினைவில் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
About the Author
R Balaji