வாக்காளர் பட்டியல் விவகாரம்; தவறு செய்தது நீங்கள், நாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டுமா? – காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி,

பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறும் சூழலில், அம்மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இந்த நடவடிக்கையின்போது 65 லட்சம் வாக்காளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர். இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் உள்ளிட்டோரின் பெயர்களை கண்டறிந்து அவற்றை நீக்கியதாக தேர்தல் ஆணையம் கூறியது.

இந்த விவகாரத்தை நாடாளுமனற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கையில் எடுத்து பரபரப்பு புகார்களை தெரிவித்தார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வாக்குப்பதிவில் பெருமளவில் முறைக்கேடு நடந்து உள்ளதாகவும், வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருந்ததாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். அவர் கூறிய குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

இதனிடையே, பீகார் வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை கண்டித்து கடந்த சில தினங்களாக நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சியினர் தினமும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று போராட்டம் நடந்தபோது பிரியங்கா மற்றும் சில காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள், மிந்தா தேவி என்ற பெண்ணின் புகைப்படத்தை கொண்ட டீ-சர்ட் அணிந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தை சேர்ந்த 35 வயது பெண் மிந்தாதேவி, வாக்காளர் பட்டியலில் தனது வயது 124 என்று தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டும் வகையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மிந்தாதேவியின் புகைப்படத்தை பயன்படுத்தியது மட்டுமின்றி, அவருக்கு 124 வயதாகிவிட்டதாக கிண்டல் செய்தனர். கர்நாடகத்தை சேர்ந்த காங்கிரஸ் மந்திரி, வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக தனது சொந்த அரசாங்கத்தையே குற்றம் சாட்டியிருக்கிறார். காங்கிரஸ் கட்சி தேசத்திடம் மன்னிப்பு கேட்குமா?” என்று பதிவிட்டார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா செய்தியாளர்களிடம் பேசுகையில், “வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக தேசத்திடம் நீங்கள் ஏன் மன்னிப்பு கேட்கவில்லை. அந்த பெண்ணின் வயதை 124 என்று தவறாக பதிவு செய்துவிட்டு, அதற்காக நீங்கள் மன்னிப்பு கேட்கவில்லை. நீங்கள் செய்த தவறுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த நாங்கள் மன்னிப்பு கேட்கவேண்டுமா? தவறு செய்பவர்களை கட்டியணைத்து, பாதிக்கப்பட்டவர்களை கைது செய்யும் அரசாங்கம் இது” என்று விமர்சித்துள்ளார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.