சஞ்சு சாம்சனை மஞ்சள் சட்டையில் பார்க்க முடியாது, ராஜஸ்தான் அணியின் ரகசிய ஒப்பந்தம்..!!

Sanju Samson ; ஐபிஎல் 2026 ஏலத்துக்கு முன்பாக சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியில் இருந்து விலகி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வருவார் என கூறப்பட்ட நிலையில், அதுவும் இப்போது கேள்விகுறியாகியுள்ளது. சஞ்சு சாம்சனை டிரேட் செய்ய மூன்று பிளேயர்களை ராஜஸ்தான் கேட்டுள்ளது. ஆனால், அந்த மூன்று பிளேயர்களையும் கொடுக்க சிஎஸ்கே மறுத்துவிட்டதால், சஞ்சு சாம்சனின் டிரேடில் இழுபறி நீடிக்கிறது. ஜடேஜா அல்லது ருதுராஜ் கெய்க்வாட் அல்லது ஷிவம் துபே ஆகியோரில் ஒருவரை ராஜஸ்தான் கேட்டுள்ளது. ஆனால், இந்த மூன்று பிளேயர்களையும் வர்த்தகம் செய்ய சிஎஸ்கே மறுத்துள்ளது. இதனால், சென்னை அணிக்கு சஞ்சு சாம்சன் வருவது கேள்விக்குறியாகியுள்ளது.

ராஜஸ்தான் அணியுடன் கருத்து வேறுபாடு

கடந்த சில வாரங்களாக, ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) நிர்வாகத்துடன் சஞ்சு சாம்சனுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஒரு பெரிய பேசுபொருளாக இருந்து வருகிறது. கடந்த 11 ஆண்டுகளாக அந்த அணியில் அங்கம் வகிக்கும் சாம்சன், வரவிருக்கும் ஏலத்திற்கு முன்னதாக தன்னை விடுவிக்க வேண்டும் என கேட்டுள்ளார். அதாவது, ராஜஸ்தான் அணியில் விளையாட விரும்பவில்லை என்பதை அணி நிர்வாகத்திடம் நேரடியாக தெரிவித்துவிட்டார்.

சிஎஸ்கே, கேகேஆர் ஆர்வம்

இதனைத் தொடர்ந்து சாம்சனை வர்த்தகம் (trade) செய்ய சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகள் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், சிஎஸ்கே அணி சில வாரங்களாக முன்னணியில் இருப்பதாகத் தோன்றினாலும், சாம்சன் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணியில் சேருவதற்கான வாய்ப்புகள் சற்று குறைவாக உள்ளன. க்ரிக்பஸ் (Cricbuzz) அறிக்கையின்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் மனோஜ் படாலே, சாம்சனுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா அல்லது ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரில் ஒருவரைக் கேட்டதாகத் தெரிகிறது. ஆனால், சிஎஸ்கே அணி அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டது.

ஏலத்தில் சஞ்சு சாம்சன்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சிஎஸ்கே அணியைச் சேர்ந்த மற்றொரு வீரரான ஷிவம் துபே மீதும் ஆர்வம் இருந்தது. ஆனால், அவரையும் டிரேட் செய்ய சிஎஸ்கேவுக்கு விருப்பம் இல்லை. இதனால், சஞ்சு சாம்சன் வர்த்தக முறையில் சென்னை அணிக்கு வர வாய்ப்புகள் குறைந்துள்ளன. ஒருவேளை ஏலத்தில் வந்தால் அவரை எடுத்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வந்துவிட்டது. 

மற்றொரு அணியுடன் ஒப்பந்தம்

இருப்பினும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஓனர் இது தொடர்பாக மற்ற அணிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொல்கத்தா, டெல்லி ஆகிய அணிகளும் இதில் உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மிகவும் நெருக்கமான வட்டாரங்கள் இதுகுறித்து பேசும்போது, ஒரு அணியுடன் சாம்சனை டிரேட் செய்வதற்கான ஒப்பந்தம் இறுதிகட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளன. ஆனால், எந்த அணி என்பது மட்டும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.