Lionel Messi India Tour: கால்பந்து ஜாம்பவானும், அர்ஜென்டினா வீரருமான லியோனல் மெஸ்ஸியின் இந்திய சுற்றுப்பயணம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அது உறுதியாகி உள்ளது. டிசம்பர் மாதத்தில் மெஸ்ஸியின் இந்த இந்திய சுற்றுப்பயணத்திற்கு ‘GOAT Tour of India 2025’ என பெயரிடப்பட்டுள்ளது.
Messi India Tour: தென்னிந்திய ரசிகர்கள் சோகம்
இந்தியாவில் முதல் நகரமாக கொல்கத்தாவுக்கு அவர் வருகை தர உள்ளார். அதைத் தொடர்ந்து அகமதாபாத், மும்பை மற்றும் புது டெல்லிக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். தென்னாந்தியாவில் அதுவும் குறிப்பாக கேரளாவில் மெஸ்ஸிக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கும் சூழலில் அவரது சுற்றுப்பயணம் தென்னிந்தியாவில் எங்குமே திட்டமிடப்படாதது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. மெஸ்ஸி அவரது சுற்றுப்பயணத்தில் பிரதமர் மோடியை வரும் டிசம்பர் 15ஆம் தேதி அன்று சந்திக்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Messi India Tour: மெஸ்ஸி இந்த தேதிகளில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்
மெஸ்ஸியை இந்தியா அழைத்து வரும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளராக சதத்ரு தத்தா செயல்பட்டு வருகிறார். இவர் இந்தாண்டின் தொடக்கத்தில் மெஸ்ஸியின் தந்தையை முதலில் சந்தித்து இந்த சுற்றுப்பயணம் குறித்து பேசியிருக்கிறார். அதன்பின் பிப்ரவரி 28ஆம் தேதி மெஸ்ஸியை அவரது வீட்டிலேயே சந்தித்த சதத்ரு தத்தா அவருடன் சுற்றுப்பயணம் குறித்து 45 நிமிடங்கள் வரை கலந்தாலோசித்து உள்ளார். சதத்ரு தத்தாவே மெஸ்ஸியின் சுற்றுப்பயணம் உறுதியாகி இருப்பதை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கூறுகையில், “நான் அங்கீகாரம் பெற்று பின்னர் அதை அதிகாரப்பூர்வமாக (சமூக ஊடகங்களில்) வெளியிட்டேன். மெஸ்ஸி அவரது சமூக வலைதளத்தில் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 1 வரை எப்போது வேண்டுமானாலும் இந்த சுற்றுப்பயணத்தின் முழு விவரங்கள் அடங்கிய போஸ்டரையும், சுற்றுப்பயணம் குறித்த ஒரு சிறிய அறிமுக வீடியோவையும் வெளியிடுவார்” என்றார்.
Messi India Tour: அடுத்த தலைமுறையை ஊக்குவிக்கும்
மெஸ்ஸியுடன் அவரது Inter Miami கிளப் அணி வீரர்கள் சிலரும் வருகை தர இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதுகுறித்து இன்னும் உறுதியாக தெரியவில்லை. மெஸ்ஸி இந்த சுற்றுப்பயணத்தில் அனைத்து நகரங்களிலும் கால்பந்து விளையாடும் சிறுவர்கள் மத்தியில் உரையாட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய கால்பந்தின் அடுத்த தலைமுறையை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Messi India Tour: கொல்கத்தாவில் மெஸ்ஸிக்கு பெரிய சிலை
டிசம்பர் 12ஆம் தேதி அன்று இரவு கொல்கத்தாவுக்கு லியோனல் மெஸ்ஸி வருகை தருகிறார். டிசம்பர் 13ஆம் தேதி அன்று காலை சிறுவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி இருக்கிறது. அங்கு சிறப்பு உணவு மற்றும் தேநீர் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அன்று மெஸ்ஸி அவரது பெரிய திருவுருச்சிலையை திறந்துவைக்க இருக்கிறார். தொடர்ந்து கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்திலோ அல்லது சால்ட் லேக் மைதானத்திலோ GOAT இசை நிகழ்ச்சி, GOAT கோப்பை தொடர் நடைபெற இருக்கின்றன.
மேலும் இதுகுறித்து சதத்ரு தத்தா கூறுகையில், “மெஸ்ஸி அவரது மிகப்பெரிய சிலையை திறந்து வைப்பது மட்டுமல்லாமல், அவருக்காக ஒரு பெரிய ஓவியம் (25 அடி உயரம் மற்றும் 20 அடி அகலம் கொண்டது) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது துர்கா பூஜை நடக்கும் இடங்களில் வைக்கப்படும், இதனால் அவரது அனைத்து ரசிகர்களும் அருகில் உள்ள செய்தி பெட்டியில் வண்ணம் தீட்டி தங்களுக்கு பிடித்த வரிகளை எழுதுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். GOAT இசை நிகழ்ச்சிக்காக மெஸ்ஸி மைதானத்திற்குள் இருக்கும்போது அந்த ஓவியம் அவருக்கு நினைவுப் பரிசாக வழங்கப்படும்” என்றார்.
Messi India Tour: மெஸ்ஸி உடன் விளையாட உள்ள பிரபலங்கள்
Goat கப் தொடர் என்பது ஒரு அணியில் ஏழு பேர் நட்பு ரீதியில் விளையாடும் கால்பந்து போட்டியாகும். இதில் மெஸ்ஸியுடன் சேர்ந்து சௌரவ் கங்குலி, லியாண்டர் பயஸ், ஜான் அபிரஹாம், பைச்சங் பூட்டியா உள்ளிட்டோர் விளையாட உள்ளனர். இந்த போட்டியை காண்பதற்கு டிக்கெட் விலை ரூ.3500 ஆக நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த போட்டியை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொடங்கிவைப்பார். எனவே இதற்காக உயர்மட்ட பாதுகாப்பு வழங்கப்படும் என கொல்கத்தா காவல் ஆணையர் உறுதியளித்திருப்பதாக தத்தா தகவல் தெரிவித்தார்.
Messi India Tour: அகமதாபாத், மும்பை சுற்றுப்பயணம்
டிசம்பர் 13ஆம் தேதி அன்று மாலை அகமதாபாத் செல்லும் மெஸ்ஸி, அங்கு அதானி அறக்கட்டளை நடத்தும் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். டிசம்பர் 14ஆம் தேதி மும்பை சென்று அங்கு பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர், வான்கடேவில் நடைபெறும் GOAT இசை நிகழ்ச்சி மற்றும் GOAT கோப்பை தொடரில் மெஸ்ஸி பங்கேற்கிறார். மேலும், CCI பிரபோர்ன் மைதானத்தில் ஷாருக்கான், லியாண்டர் பயஸ் ஆகியோருடன் சேர்ந்த Padel விளையாடுகிறார். 5-10 நிமிடம் வரை மெஸ்ஸி Padel விளையாடுவார் என கூறப்படுகிறது.
Messi India Tour: சச்சின், தோனியுடன் சந்திப்பு
வான்கடே மைதானத்தில் மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானம் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சியில் மெஸ்ஸியுடன், சச்சின் டெண்டுல்கர் பங்கேற்க இருக்கிறார் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் எம்எஸ் தோனி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரும் இதில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. பாலிவுட் நடிகர்கள் ரன்வீர் சிங், ஆமிர் கான், டைகர் செராஃப் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்கிறார்கள்.
Messi India Tour: விராட் கோலி – மெஸ்ஸி சந்திப்பு
தொடர்ந்து டிசம்பர் 15ஆம் தேதி டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் மெஸ்ஸி அவரை சந்திக்கிறார். தொடர்ந்து டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் GOAT இசை நிகழ்ச்சி மற்றும் GOAT கோப்பை போட்டியில் பங்கேற்கிறார். இதில் டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்கம் விராட் கோலி மற்றும் சுப்மான் கில் ஆகியோரை நிகழ்ச்சிக்கு அழைக்க இருப்பதாக கூறப்படுகிறது. சுப்மான் கில் மெஸ்ஸியின் மிகப்பெரிய ரசிகர்கள் என்பது அனைவரும் அறிந்தது. இந்திய கிரிக்கெட் அணி அதற்கு முந்தைய நாள் (டிசம்பர் 14) தரம்சாலாவில் தென்னாப்பிரிக்கா உடன் 3வது டி20 போட்டியில் விளையாடும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Messi India Tour: 14 ஆண்டுகளுக்கு பின்…
லியோனல் மெஸ்ஸி கடைசியாக 2011ஆம் ஆண்டு இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் ஃபிபாவின் நட்பு ரீதியான போட்டியில் அர்ஜென்டினா – வெனிசுலா அணிகள் விளையாடின. அப்போது அர்ஜென்டினா அணியுடன் மெஸ்ஸி விளையாடினார். அதன்பின் சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு மெஸ்ஸி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.