லண்டன்,
அமெரிக்க ஜனாதிபதியாக நடப்பு ஆண்டு ஜனவரியில் டிரம்ப் பொறுப்பேற்ற பின்னர், 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிற உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளிடையேயான போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பல முறை பேசினார்.
இந்நிலையில், அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் எல்மென்டார்ப்-ரிச்சர்ட்சன் கூட்டு ராணுவ படை தளத்தில் நாளை (15-ந்தேதி) அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் நேரில் சந்தித்து பேசுகின்றனர்.
இந்த சந்திப்பில் உக்ரைன் அமைதி ஒப்பந்தம் பற்றி இருவரும் ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை டிரம்ப், அவருடைய ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் உறுதிப்படுத்தினார். இதனை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் டிரம்ப் பேசும்போது, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் மேற்கொள்ள உள்ள சந்திப்பின் முதல் 2 நிமிடங்களிலேயே ஒப்பந்தம் ஏற்படுமா? இல்லையா? என்பது எனக்கு சரியாக தெரிந்து விடும்.
எனினும், மிக மிக விரைவில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும். அதனை உடனடியாக பார்க்க நான் விரும்புகிறேன் என டிரம்ப் கூறினார். 4 ஆண்டுகளில் முதன்முறையாக இரு தலைவர்களும் நேருக்கு நேராக சந்தித்து ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த உள்ளனர். அதனால், நாளை நடைபெறவுள்ள போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தை உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
முதல் கூட்டம் நன்றாக நடந்தால், உடனடியாக 2-வது கூட்டம் ஒன்றை நாங்கள் நடத்துவோம். உடனடியாக அதனை நடத்தவே நான் விரும்புவேன் என டிரம்ப் கூறியுள்ளார். புதின் மற்றும் ஜெலன்ஸ்கி பங்கேற்கும் முத்தரப்பு கூட்டத்திற்கான சாத்தியம் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
டிரம்பு உடனான முக்கிய சந்திப்பை முன்னிட்டு, ரஷிய அரசின் உயரதிகாரிகளுடன் புதின் இன்று ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். இதன்பின்னர் கிரெம்ளின் மாளிகையில் இருந்து வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அதில், டிரம்ப் அரசு நிர்வாகம் போரை நிறுத்துவதற்காக முழு அளவில் துடிப்பான மற்றும் உண்மையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் நலன் பெறுவதற்கான ஒப்பந்தங்களை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நம்முடைய இரு நாடுகளுக்கு இடையே, ஐரோப்பிய நாடுகள் மற்றும் உலகில் உள்ள அனைத்து நாடுகள் ஆகியவற்றின் அமைதிக்கான நீண்டகால நிபந்தனைகளை, அமெரிக்காவுடன் கூட, ஒரு ஒப்பந்தத்தின் கீழ் நாம் அடைய முடியும். அணு ஆயுத கட்டுப்பாடுக்கான விசயமும் இதில் அடங்கும் என புதின் குறிப்பிட்டு உள்ளார்.