லக்னோ,
உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் மோகன்லால்கஞ்ச் புறநகர் பகுதியில் பிரமோத் சாஹூ (வயது 42) என்பவர், தெருவோரத்தில் சிறிய கடை ஒன்றை போட்டு நொறுக்குத்தீனிகளை விற்று வந்துள்ளார். அதில், வறுத்த உருளை கிழங்கு வறுவல், பொறித்த முட்டைகள் உள்ளிட்டவற்றை வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்திருக்கிறார்.
இதற்கு நன்றாக வரவேற்பும் இருந்துள்ளது. ஆனால், யாருக்கும் தெரியாமல் அவற்றில் கஞ்சாவை தடவி விற்றுள்ளார். சட்னியில் கூட கஞ்சாவை கலந்து விற்றிருக்கிறார். கஞ்சாவை பொட்டலம் போட்டும் தனியாக விற்று வந்திருக்கிறார். இதுபற்றி தகவல் அறிந்த லக்னோ போலீசார் சாஹூவை கைது செய்தனர்.
இதேபோன்று, ரெயில்வே நிலையம், பஸ் நிலையம், டாக்சி நிலையம், பள்ளி மற்றும் கல்லூரிகளை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்ற குற்றச்சாட்டின் பேரில் 2 வாலிபர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த இரு சம்பவங்களில் தொடர்புடைய 4 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர் என உதவி போலீஸ் கமிஷனர் ரஜ்னீஷ் வர்மா செய்தியாளர்களிடம் நேற்று கூறினார்.