Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 2025 ஐபிஎல் சீசனில் மிக மோசமாக விளையாடி 10வது இடத்தில் நிறைவு செய்தது. 2023ஆம் ஆண்டில் ஐபிஎல் கோப்பையை வென்ற பின்னர், 2024 மற்றும் 2025இல் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறவில்லை.
CSK: சிஎஸ்கே அணிக்குள் வந்த பிரேவிஸ்
இதனால் அடுத்த 2026 ஐபிஎல் சீசனை சிஎஸ்கே (CSK) நிச்சயம் வெறித்தனமாக விளையாட நினைக்கும். கடந்த சீசனிலேயே காயமடைந்த வீரர்களுக்கு மாற்றாக வெறித்தனமாக விளையாடும் சில முக்கிய வீரர்களை சிஎஸ்கே எடுத்துக்கொண்டது, இதனால் அடுத்த 2026 மினி ஏலத்தில் சிஎஸ்கேவுக்கு பெரிய வேலை குறைந்துவிட்டது எனலாம். குறிப்பாக, மெகா ஏலத்தில் Unsold ஆன தென்னாப்பிரிக்கா வீரர் டிவால்ட் பிரேவிஸை அணிக்குள் எடுத்தது சிஎஸ்கேவுக்கு பெரியளவில் ஊக்கம் அளித்திருக்கிறது எனலாம்.
டிவால்ட் பிரேவிஸ் 6 இன்னிங்ஸ்களில் மட்டும் 225 ரன்களை அடித்திருந்தார். அதில் 13 பவுண்டரி, 17 சிக்ஸர் அடக்கம். சிஎஸ்கேவின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் குர்ஜப்னீத் சிங் காயம் காரணமாக விலகினார். அவருக்கு மாற்று வீரராக டிவால்ட் பிரேவிஸ் உள்ளே வந்தார். குர்ஜப்னீத் சிங்கை சிஎஸ்கே ரூ.2.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது, டிவால்ட் பிரேவிஸின் அடிப்படை தொகை ரூ.75 லட்சம் ஆகும்.
CSK: அஸ்வின் சொன்ன தகவல்
இந்நிலையில், டிவால்ட் பிரேவிஸை சிஎஸ்கே அணி ஐபிஎல் சீசனின் இடையே எப்படி எடுத்தது என்பது குறித்து சிஎஸ்கே ஸ்பின்னர் ரவிசந்திரன் அஸ்வின் அவரது யூ-ட்யூப் சேனலில் பேசுகையில், “பிரெவிஸ் பற்றி, நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். கடந்த ஐபிஎல் தொடரில் அவர் சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக விளையாடினார். உண்மையில், வேறு சில அணிகள் அவருடன் அந்த நேரத்தில் பேசிக்கொண்டிருந்தன.
சில அணிகள் விலை காரணமாக அவரை எடுக்காமல் விட்டது. அவர் மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட வேண்டியபோது, அடிப்படை விலையில் ஒப்பந்தம் செய்யப்பட வேண்டியிருந்தது. ஆனால் என்ன நடக்கிறது என்றால், ‘நீங்கள் முகவர்களிடம் பேசுங்கள், நீங்கள் எனக்கு (பிரேவிஸ்) குறிப்பிட்ட தொகையை கூடுதலாகக் கொடுத்தால், நான் வருவேன் என்று கூறியிருக்கிறார். சிஎஸ்கே அந்த தொகையை கொடுத்ததால் அவர் சிஎஸ்கேவுக்கு வந்தார்” என்றார்.
CSK: குறுக்கு வழியில் சென்றதா சிஎஸ்கே?
இந்நிலையில், அஸ்வின் பேசியதுதான் தற்போது சர்ச்சையை கிளிப்பி உள்ளது. பிரெவிஸை அவரது அடிப்படை விலையை விட அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்ததன் மூலம் சிஎஸ்கே விதியில் இருந்த ஓட்டையைப் பயன்படுத்திக் கொண்டுள்ளது என முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா அவரது யூ-ட்யூப் சேனலில் பேசுகையில், “முதல் போட்டியில் அவர் (பிரேவிஸ்) விளையாடவில்லை, ஆனால் அதன் பிறகு, அவர் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார், பவுண்டரி கோட்டிற்கு அருகேவும் சிறப்பான கேட்சை பிடித்தார்.
பிரேவிஸ் அதிக பணம் கேட்டதாக அஸ்வின் தெரிவித்துள்ளார். அவருக்கு அதிகாரப்பூர்வமாக கிடைக்க வேண்டியதை விட அதிக பணம் கொடுக்க ஏதேனும் ஏற்பாடு உள்ளதா? அப்படிப்பட்ட சூழ்நிலையில், சிஎஸ்கே அதன் பர்ஸ் வரம்பை தாண்டி செலவிட முடியுமா? அஸ்வின் பேசியிருந்ததில், ஏதேனும் ஓட்டை இருக்கிறதா…” என்றார்.
CSK: ஆகாஷ் சோப்ரா எழுப்பிய கேள்வி
“ஒரு வீரருக்கு விகித அடிப்படையில்தான் சம்பளம் வழங்கப்படும். அது உங்கள் அடிப்படை தொகையை விட குறைவாக இருக்கக் கூடாது. அதேநேரத்தில் காயமடைந்த குர்ஜப்னீத் சிங்கின் சம்பளம் ரூ.2.20 கோடியை தாண்டியும் இருக்கக் கூடாது” என்று அவர் குறிப்பிட்டு பேசியிருந்தார். அதாவது, சிஎஸ்கே பர்ஸ் தொகையில் இல்லாத தொகையை, அடுத்த வருடம் அணியில் தக்கவைப்பதற்காக கூடுதலாக கொடுத்திருக்கிறதா என்றும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் வீரருக்கு ஒரு தொகையை கொடுப்பது குறுக்கு வழி இல்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.