Asia Cup 2025, Team India: செப்டம்பர் 9ஆம் தேதி நடக்கும் ஆசிய கோப்பை 2025 தொடர், வரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி மற்றும் துபாயில் தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய அணிகள் ஏ பிரிவிலும்; இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.
வரும் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை தொடர் இறுதிப்போட்டி வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றால் மீண்டும் ஒரு முறை இரு அணிகளும் மோதும் வாய்ப்பு ஏற்படும்.
Asia Cup 2025: இந்திய அணி எப்போது அறிவிப்பு?
இந்நிலையில், ஆசிய கோப்பைக்கான இந்திய அணி இன்னும் சில நாள்களில் அறிவிக்கப்பட உள்ளது. வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி மும்பையில் நடக்கும் பிசிசிஐ கூட்டத்தில் ஆசிய கோப்பைக்கான இந்திய அணி ஸ்குவாட் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. அதைத் தொடர்ந்து, தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் செய்தியாளர்களை சந்திப்பார் என்றும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
Asia Cup 2025: இந்த 3 பேருக்கு வாய்ப்பே இல்லை
ஆசிய கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ்தான் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில் ஆகியோருக்கு பிசிசிஐ வாய்ப்பு கொடுக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Asia Cup 2025: இந்திய அணி காம்பினேஷன் சிக்கல்
சூர்யகுமார் யாதவ் வருவது உறுதியாகிவிட்டதால் டாப் ஆர்டர் ஏற்கெனவே செட்டாகிவிட்டது எனலாம். சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் பேட்டிங் ஆர்டரில் செட்டாகிவிட்டனர். கடந்த டி20 உலகக் கோப்பை அணியிலேயே சுப்மான் கில் இடம்பெறவில்லை. யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பிளேயிங் லெவனில் இடமும் இல்லை. ஷ்ரேயாஸ் ஐயரும் 2023ஆம் ஆண்டுக்கு பின் டி20ஐ போட்டிகளில் விளையாடவில்லை. ஆனால் இந்த மூன்று பேரும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடியிருந்தாலும் கூட இவர்களுக்கு இந்திய அணியில் இடமில்லை என்பதுதான் நிதர்சனம்.
ஆரம்பத்தில் சுப்மான் கில் துணை கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் அணிக்குள் வந்தால் காம்பினேஷன் சீர்குலையும் என்பதால் அவரை வெளியே வைக்க தேர்வுக்குழு முடிவெடுத்துள்ளது. ஓப்பனிங்கிற்கு பேக்அப் தேவையில்லை என கில், ஜெய்ஸ்வாலுக்கு இடமில்லை என்பது உறுதியாகி உள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் டாப் ஆர்டரில் நம்பர் 3, நம்பர் 4 இடத்தில்தான் விளையாடுவார். அதனால், அவருக்கும் இடமில்லை.
எனவே, ஷ்ரேயாஸ் ஐயரை தற்போதைக்கு ஓடிஐ தொடர்களிலும், உள்நாட்டு டெஸ்ட் தொடர்களிலும் பரிசோதித்துவிட பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால், கில் ஆகியோருக்கு ஓடிஐ மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் பிசிசிஐ வாய்ப்பளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.