மும்பை,
இணையதள பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், அதன்மூலம் நடைபெறும் மோசடிகள் மற்றும் பணம் பறிப்பு சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. அந்தவகையில் மும்பை சேர்ந்த முதாட்டி ஒருவரை ‘டிஜிட்டல் கைது’ செய்துள்ளதாக மிரட்டி ரூ.7.70 கோடியை மோசடி கும்பல் அபகரித்துள்ளது.
மும்பை கொலபா பகுதியில் பொதுத்துறை நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 83 வயது மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வருகிறார். மூதாட்டியின் 2 மகள்கள் திருமணம் முடிந்து வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். கடந்த மாதம் 4-ந்தேதி தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய ஊழியர் என கூறிக்கொண்டு ஒருவர் மூதாட்டியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
அவர் மூதாட்டியின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்து ஜெட்ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாக கூறினார். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளனர் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இந்த நிலையில் மூதாட்டிக்கு மற்றொரு செல்போன் எண்ணில் இருந்து வாட்ஸ்-அப்பில் வீடியோகால் வந்தது. அப்போது போலீஸ் சீருடை அணிந்து ஒருவர் மூதாட்டியிடம் பேசினார். அவர் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் மூதாட்டியை டிஜிட்டல் கைது செய்து இருப்பதாக கூறினார். மேலும் ஆன்லைன் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லையெனில் வீட்டுக்கு வந்து மூதாட்டி மட்டுமின்றி அவரது பிள்ளைகளையும் கைது செய்து விடுவோம் என மிரட்டினார்.
இதனால் மூதாட்டி அதிர்ச்சியில் உறைந்துபோனார். பயத்தில் அந்த கும்பல் சொன்ன அனைத்தையும் அவர் செய்தார். அவர்கள் முதலில் மூதாட்டியின் வங்கி இருப்பு, முதலீடுகள் உள்ளிட்ட விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.
இதையடுத்து போலீஸ் சீருடையில் பேசிய நபர் உள்ளிட்ட சிலர், பல்வேறு வங்கி கணக்குகளை கூறி அதற்கு பணம் அனுப்புமாறு மூதாட்டியை மிரட்டினர். பயத்தில் இருந்த மூதாட்டியும் அந்த வங்கி கணக்குகளுக்கு ரூ.7 கோடியே 70 லட்சம் வரை ஆன்லைன் மூலம் அனுப்பினார். மூதாட்டியிடம் முடிந்தவரை பணத்தை கறந்த கும்பல் பின்னர் அவரது தொடர்பை துண்டித்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மூதாட்டி நடந்த சம்பவம் குறித்து தனது மகளிடம் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மகள், மூதாட்டியிடம் போலீசில் புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து மூதாட்டி நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டியிடம் பணம் பறித்த கும்பலை வலைவீசி தேடிவருகின்றனர்.