நியூயார்க்,
உக்ரைன் மற்றும் ரஷியா நாடுகளுக்கு இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிற போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஈடுபட்டு வருகிறார். இதற்காக புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பல முறை பேசினார்.
இதனையடுத்து, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் எல்மென்டார்ப்-ரிச்சர்ட்சன் கூட்டு ராணுவ படை தளத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் இருவரும் இன்று (இந்திய நேரப்படி இரவு) நேரில் சந்தித்து பேசுகின்றனர்.
இந்த சந்திப்பில் உக்ரைன் அமைதி ஒப்பந்தம் பற்றி இருவரும் ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 4 ஆண்டுகளில் முதன்முறையாக இரு தலைவர்களும் நேருக்கு நேராக சந்தித்து ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த உள்ளனர். அதனால், இன்று நடைபெறவுள்ள போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தை உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
டிரம்ப் உடனான முக்கிய சந்திப்பை முன்னிட்டு, ரஷிய அரசின் உயரதிகாரிகளுடன் புதின் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் ஒன்றையும் நடத்தினார். இரு நாட்டு தலைவர்களின் இந்த சந்திப்பால் யார் யாருக்கு என்ன லாபம் ஏற்படும் என பார்க்கலாம்.
இந்த சந்திப்பில் சுமுக உடன்பாடு ஏற்பட்டால், அது டிரம்பின் அரசு நிர்வாகத்தில் ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுவதுடன், டிரம்புக்கு நல்ல பெயர் கிடைக்கும். டிரம்ப் ஒரு சிறந்த ஒப்பந்த ஏற்பாட்டாளராக பார்க்கப்படுவதுடன், உலகளவில் அமைதி ஏற்படுத்துபவராக தன்னை நிரூபிப்பதற்கான ஒரு வாய்ப்பும் உள்ளது.
ஏற்கனவே அவர், மோதலில் ஈடுபட்டு வந்த நாடுகளுக்கு இடையே சமரசம் ஏற்படுத்திய கடந்த கால சம்பவங்களும் உள்ளன. இதற்காக டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்ற குரலும் வலுத்து வருகிறது.
இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் போரை முடிவுக்கு கொண்டு வந்ததற்காக டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். இதேபோன்று, கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையே நிபந்தனையற்ற போர்நிறுத்தம் ஏற்படுவதில் முக்கிய பங்காற்றியதற்காக டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என கம்போடிய பிரதமரும் ஏற்கனவே கூறியுள்ளார்.
இந்த சூழலில், டிரம்புடனான புதினின் சந்திப்பால், ரஷியாவுக்கும் லாபங்கள் உள்ளன. நேட்டோவில் கூட்டணி நாடாக உக்ரைன் இணைவது தடுக்கப்படும். இதனால், ரஷியாவின் கட்டுக்குள் மீண்டும் உக்ரைனை இழுத்து கொண்டு வருவதற்கான வாய்ப்பும் அமையும்.
இவர்கள் இடையேயான சந்திப்பின் பயனால் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டால், அது உக்ரைனில் உள்ள குழந்தைகள், பெண்கள் மற்றும் வீரர்கள் என மக்கள் அனைவருக்கும் நீண்டகாலத்திற்கு பின்னர் அமைதியையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரும் என பார்க்கப்படுகிறது.
அலாஸ்காவில் நடைபெறும் புதின் மற்றும் டிரம்ப் இடையேயான சந்திப்பானது குறைந்தது, 6 முதல் 7 மணிநேரம் வரை நடைபெறும் என கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ கூறியுள்ளார். இதனை ரஷியாவின் சேனல் ஒன் என்ற அரசு ஊடகம் வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது. இது ஆக்கப்பூர்வ சந்திப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.