2-வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலிய ஏ அணியை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா ஏ

மெக்கே,

ராதா யாதவ் தலைமையிலான இந்தியா ஏ மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா ஏ அணி கைப்பற்றி விட்டது.

தற்போது இந்தியா ஏ – ஆஸ்திரேலியா ஏ இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 265 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அலிசா ஹீலி 91 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் மின்னு மணி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா 49.5 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 266 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் யாஸ்திகா பாட்டியா (66 ரன்), கேப்டன் ராதா யாதவ் (60 ரன்), தனுஜா கன்வார் (50 ரன்) ஆகியோர் அரைசதம் விளாசினர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய ஏ அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து இவ்விரு அணிகள் மோதும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.