IPL 2026 Mini Auction, Chennai Super Kings: தென்னாப்பிரிக்கா அணி மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஓடிஐ போட்டிகளை விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 தொடர் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதியே தொடங்கிவிட்டது.
AUS vs SA: மிரட்டிய பிரெவிஸ்
1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் இருந்தது. அந்த வகையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி கெய்ர்ன்ஸ் நகரில் இன்று (ஆகஸ்ட் 16) நடைபெற்றது. டாஸை வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென்னாப்பிரிக்கா அணியில் டொவால்ட் பிரெவிஸ் 26 பந்துகளில் 53 ரன்கள் அடித்து மிரட்ட, ஸ்டப்ஸ் மற்றும் வான் டெர் டஸ்ஸன் ஆகியோரும் ஓரளவு ரன்களை குவிக்க 20 ஓவர்கள் முடிவுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை அடித்தது.
AUS vs SA: பரபரப்பான கடைசி ஓவர்
ஆஸ்திரேலியா 173 ரன்கள் என்ற இலக்கை கடைசி ஓவர் வரை எடுத்துச் சென்றது. குறிப்பாக, கார்பின் பாஷ் வீசிய 19வது ஓவரில் 2 ரன்கள் மட்டும் கொடுக்கப்பட்டு 2 விக்கெட்டுகள் சரிந்தன. மேக்ஸ்வெல் மட்டும் அரைசதம் கடந்து களத்தில் நிற்கிறார், லுங்கி இங்கிடி கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்படுகிறது. கடைசி ஓவரின் முதல் பந்தையே பவுண்டரியின் பக்கம் மேக்ஸ்வெல் பறக்கவிட்டாலும், அங்கேயும் கார்பின் பாஷ் அற்புதமான பீல்டிங்கால் பவுண்டரியை தடுத்து, 2 ரன்களை சேமித்தார்.
AUS vs SA: முடித்துக்கொடுத்த மேக்ஸ்வெல்
இருந்தாலும் அடுத்த பந்தில் பவுண்டரியை அடித்து மேக்ஸ்வெல் அழுத்தத்தை குறைத்தார். இருப்பினும், மேக்ஸ்வெல் 3வது, 4வது பந்தில் ரன்னேதும் எடுக்காத நிலையில், 5வது பந்தில் ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட்டில் Third Man திசையில் பவுண்டரியை அடித்து ஆட்டத்தை முடித்துவைத்தார். 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. 62 ரன்களை அடித்து மேக்ஸ்வெல் ஆட்ட நாயகன் விருதையும், டிம் டேவிட் தொடர் நாயகன் விருதையும் வென்றார். டி20 தொடர் நிறைவடைந்தாலும் அடுத்து ஓடிஐ தொடர் வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி தொடங்குகிறது.
Glenn Maxwell: தொடர்ந்து சொதப்பிய மேக்ஸ்வெல்
இவை ஒருபுறம் இருக்க, மேக்ஸ்வெல்லின் இந்த ஆட்டம் நிச்சயம் ஐபிஎல் அணிகளின் பார்வையையும் கவர்ந்திருக்கும் என்பது முக்கியமானதாகும். அதிலும் குறிப்பாக சிஎஸ்கே மேக்ஸ்வெல்லை உற்று கவனித்திருக்கும். இந்த தொடரின் முதலிரண்டு போட்டிகளில் மேக்ஸ்வெல் பெரியளவில் சோபிக்கவில்லை. முதல் போட்டியில் 5 பந்துகளில் 1 ரன், இரண்டாவது போட்டியில் 10 பந்துகளில் 16 ரன்கள் என்றே அடித்திருந்தார். 2025 ஐபிஎல் தொடரிலும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக இவர் 6 இன்னிங்ஸ்களில் 48 ரன்களையே அடித்திருந்தார்.
அமெரிக்காவில் நடந்த மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடரில் இவர் வாஷிங்டன் பீரிடம் அணிக்கு கேப்டனாக செயல்பட்டார். ஒரு போட்டியில் மட்டும் 102* ரன்களை குவித்து மற்ற போட்டிகளில் ஓரளவு மட்டும் ரன்களை அடித்தார். அதிலும் மேக்ஸ்வெல் ஆட்டத்தை முடித்துக்கொடுக்கும் ஃபினிஷிங் திறன்கொண்டவர் ஆவார். ஆனால், சமீப காலங்களில் அவர் அப்படி எந்த ஆட்டத்தையும் முடித்துக்கொடுக்கவே இல்லை என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டுகளாக இருந்தது. ஆனால், 36 வயதான மேக்ஸ்வெல் தன்னிடம் இன்னும் அந்த திறன் இருக்கிறது என்பது இன்று சர்வதேச அளவில் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
Glenn Maxwell: மேக்ஸ்வெல்லை பஞ்சாப் கழட்டிவிடும்
அப்படியிருக்க, இவர் ஐபிஎல் மினி ஏலத்தில் அதிகம் கவனம் பெறுவார். இவர் தற்போது இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணியில் மார்கஸ் ஸ்டாய்னிஸ், மார்கோ யான்சன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ஆரான் ஹார்டி என வெளிநாட்டு ஆல்-ரவுண்டர்கள் எக்கச்சக்கமாக இருக்கிறார்கள். பேட்டர்கள் ஜாஷ் இங்லிஸ் வேறு இருக்கிறார். சுழற்பந்துவீச்சில் சஹாலுடன், ஹர்பிரீத் பிரார் இருக்கிறார். இந்த சூழலில் மேக்ஸ்வெல் பஞ்சாப்பின் காம்பினேஷனில் சரிப்பட்டு வரமாட்டார். அவரை சுமார் ரூ.4.20 கோடிக்கு பஞ்சாப் எடுத்தது.
CSK: சிஎஸ்கேவுக்கு மேக்ஸ்வெல் ஏன் தேவை?
இருப்பினும், அணியை வலுப்படுத்தும் விதமாக காம்பினேஷனில் வராத இவரை மினி ஏலத்திற்கு விடுவிப்பதே சரியான ஆப்ஷனாக இருக்கும். அப்படி பஞ்சாப் கிங்ஸ் அணி விடுவித்தால் மினி ஏலத்தில் மற்ற அணிகளை காட்டிலும் சிஎஸ்கே அதிக தொகை கொடுத்தும் இவரை எடுக்க நினைக்கும். காரணம், சிஎஸ்கேவுக்கு வெளிநாட்டு ஆல்-ரவுண்டர் சரியாக அமையவில்லை, பினிஷிங் ரோலும் நிலையானதாக ஒரு வீரரிடம் இல்லை. எனவே அஸ்வின் வெளியேறும்பட்சத்தில் மேக்ஸ்வெல்லை பின்வரிசையில் விளையாட வைக்கலாம், ஆப்-ஸ்பின்னராகவும் பயன்படுத்தலாம்.
CSK: சிஎஸ்கேவில் இந்த 4 வெளிநாட்டு வீரர்கள்
மேக்ஸ்வெல் சிஎஸ்கேவின் காம்பினேஷனில் வந்தால் சிஎஸ்கே இரண்டு இந்திய ஓப்பனர்களை விளையாட வைக்கலாம். சிஎஸ்கேவின் பிளேயிங் காம்பினேஷனில் டெவால்ட் பிரேவிஸ், மேக்ஸ்வெல், நூர் அகமது, பதிரானா/எல்லிஸ் ஆகியோர் இருப்பார்கள். எனவே, தேவையில்லாத வெளிநாட்டு வீரர்களான ஓவர்டன், கான்வே, சாம் கரன் போன்றவர்களை நீக்கிவிட்டு பேக்அப் வீரர்களை பெறலாம். மேலும், கேம்ரூன் கிரீன் ஒருவேளை சிஎஸ்கேவுக்கு கிடைக்காதபட்சத்தில் மேக்ஸ்வெல் நல்ல ஆப்ஷனாகவே இருப்பார். அந்த வகையில், மினி ஏலத்தில் மேக்ஸ்வெல் எனும் சிங்கத்தை சிஎஸ்கே தவறவிடக்கூடாது.