வரவிருக்கும் ஆசியகோப்பை 2025 தொடருக்கான இந்திய அணி தேர்வு நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், தொடக்க ஆட்டக்காரர் இடத்திற்கு சஞ்சு சாம்சன் மற்றும் சுப்மன் கில் இடையே நிலவும் போட்டி, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அபிஷேக் சர்மாவுடன் சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக களமிறங்கி வந்த நிலையில், டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் மீண்டும் டி20 அணிக்கு திரும்பலாம் என்ற செய்திகள், இந்த விவாதத்தை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது. இருவரின் முதல் 21 சர்வதேச டி20 போட்டிகளின் புள்ளிவிவரங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது, ஆச்சரியமான முடிவுகள் வெளி வருகின்றன.
ரன்கள் மற்றும் சராசரியில் கில் முன்னிலை
முதல் 21 போட்டிகளின் முடிவில், ரன்கள் மற்றும் சராசரி ஆகிய இரண்டிலுமே சுப்மன் கில், சஞ்சு சாம்சனை விட முன்னிலையில் இருக்கிறார். கில் 578 ரன்களை 30.42 என்ற சராசரியில் குவித்துள்ளார். ஆனால், சாம்சன் அதே காலகட்டத்தில் 320 ரன்களை மட்டுமே 18.82 என்ற குறைந்த சராசரியில் எடுத்துள்ளார். இது, ஒரு பேட்ஸ்மேனாக கில் அதிக நிலைத்தன்மையுடன் செயல்படுவதைக் காட்டுகிறது. அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்ற சாம்சனை விட, ஸ்ட்ரைக் ரேட்டிலும் சுப்மன் கில் (139.27) சற்றே முன்னிலையில் உள்ளார் (சாம்சன் – 131.14). குறிப்பாக, நியூசிலாந்துக்கு எதிராக 184.61 என்ற அபாரமான ஸ்ட்ரை ரேட்டில் கில் ரன் குவித்துள்ளார்.
பெரிய ஸ்கோர்களில் கில் கிங்
பெரிய ஸ்கோர்களை அடிப்பதிலும் கில் தனது திறமையை நிரூபித்துள்ளார். அவர் தனது முதல் 21 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் மூன்று அரைசதங்களுடன், நான்கு முறை 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். ஆனால், சாம்சன் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார்.
தேர்வாளர்களின் குழப்பம்
புள்ளிவிவரங்களின் அடிப்படையில் சுப்மன் கில் முன்னிலையில் இருந்தாலும், சஞ்சு சாம்சன் ஒரு விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் என்பது அவருக்குக் கூடுதல் பலமாகும். தற்போதைய இந்திய அணியின் தொடக்க ஜோடியாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்த வெற்றிக் கூட்டணியைக் கலைத்து, கில்லை அணிக்குள் கொண்டு வருவது ஒரு சவாலான முடிவாகவே இருக்கும். சுப்மன் கில் ஒருவேளை அணிக்குத் திரும்பினால், அவர் தொடக்க வீரராகவே களமிறங்க விரும்புவார். அப்படி நடந்தால், சஞ்சு சாம்சனின் இடம் கேள்விக்குறியாகும். புள்ளிவிவரங்கள் ஒருபுறம் இருந்தாலும், அணியின் தற்போதைய தேவை மற்றும் காம்பினேஷனை பொறுத்தே தேர்வாளர்களின் இறுதி முடிவு அமையும்.
About the Author
RK Spark