கிரிக்கெட்டின் கடவுள் என போற்றப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். இவர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்துள்ளார். கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட்டுடன் பயணித்தவர். இவருக்கு சாரா டெண்டுல்கர் மற்றும் அர்ஜுன் டெண்டுல்கர் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், அக்கா டெண்டுல்கர் சாரா இருக்க, தம்பி அர்ஜுனுக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
மும்பையை சேர்ந்த தொழிலதிபரின் மகளான சானியா சந்தோக்குடன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலை இருவரும் தங்களின் குடும்பத்தினரிடம் கூறிய பின், இரு தரப்பினரும் நேரில் சந்தித்து பேசி அர்ஜுன் மற்றும் சானியாவுக்கும் இடையே திருமணம் செய்து வைக்க முடிவுவெடுத்துள்ளனர். தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. திருமணம் குறித்த தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில்,அர்ஜுன் டெண்டுல்கருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சானியா சந்தோக்கின் வயது வித்தியாசம் தெரியவந்துள்ளது. சானியா அர்ஜுனை விட பெரியவராக உள்ளார். அதாவது, அர்ஜுன் டெண்டுல்கர் 1999ஆம் ஆண்டு செப்டம்பரில் பிறந்திருக்கிறார். ஆனால், சானியா சந்தோக் 1998ஆம் ஆண்டு ஜுன் 23ஆம் தேதி பிறந்திருக்கிறார். இதன்மூலம் அர்ஜுன் டெண்டுல்கரை விட சானியா சந்தோக் ஒரு வயது முத்தவராக உள்ளார்.
அப்பா சச்சின் டெண்டுல்கரும் தன்னை விட 5 வயது மூத்தவரான அஞ்சலியை திருமணம் செய்துக்கொண்டார். தற்போது அர்ஜுன் டெண்டுல்கரும் தன்னை விட ஒரு வயது மூத்த பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
25 வயதான அர்ஜுன் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் தனது அப்பா போல் பேட்ஸ்மேனாக இல்லாமல் சிறந்த பந்து வீச்சாளராக முயன்று வருகிறார். முதல் தர கிரிக்கெட்டில் 17 போட்டிகளில் விளையாடி 532 ரன்களையும் 37 விக்கெட்களையும் வீழ்த்தி இருக்கிறார். லிஸ்ட் ஏ-வில் 15 போட்டிகளில் 21 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் விளையாடினார். மும்பை அணிக்காக இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்கள் மட்டுமே கைப்பற்றி உள்ளார்.
About the Author
R Balaji