Asia Cup 2025: ஆசிய கோப்பை தொடர் வரும் செப். 9ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. அபுதாபி மற்றும் துபாயில் நடைபெறும் இந்த தொடர் டி20 வடிவில் நடைபெறுகிறது, 19 போட்டிகள் மொத்தம் நடைபெற உள்ளன.
Asia Cup 2025: 8 அணிகள் மோதல்
இந்தியா உள்பட மொத்தம் 8 அணிகள் ஆசிய கோப்பை தொடரில் விளையாடுகின்றன. அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும்; பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகளும் இடம்பெற்றுள்ளன. அனைவரும் எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி செப். 14ஆம் தேதி நடைபெறுகிறது. செப். 28ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது.
Asia Cup 2025: 15 பேர் கொண்ட இந்திய அணி…
அந்த வகையில், ஆசிய கோப்பை 2025 தொடருக்கான இந்திய அணி ஸ்குவாட் நாளை (ஆகஸ்ட் 19) அறிவிக்கப்பட உள்ளது. மேலும், மும்பையில் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஸ்குவாட் அறிவிப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார். நாளைக்குதான் இந்திய அணி அறிவிக்கப்படும் என்றாலும் தற்போதே எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்து லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி உள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் 15 பேர் கொண்ட வீரர்கள் அறிவிக்கப்பட இருக்கிறார்கள்.
Asia Cup 2025: ஓபனிங் பேக்அப் இல்லை
அந்த வகையில், அபிஷேக் சர்மா – சஞ்சு சாம்சன் ஆகியோர்தான் ஓபனிங்கில் இறங்குவார்கள். பேக்-அப் ஓப்பனர்கள் இடம்பெறவில்லை. இதனால் சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு வாய்ப்பில்லை. அதேநேரத்தில், ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா ஆகியோரால் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பலமாகும். விக்கெட் கீப்பர் பேக்அப்பாக ஜித்தேஷ் சர்மா தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Asia Cup 2025: ஆல்-ரவுண்டர்கள், பௌலர்கள் யார் யார்?
அதேநேரத்தில், பிரதான சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக அக்சர் பட்டேல் இருப்பார். அவருக்கு பேக்அப்பாக வாஷிங்டன் சுந்தர் இடம்பெறுவார் என கூறப்படுகிறது. ஹர்திக் பாண்டியாவுக்கு பேக்அப்பாக சிவம் தூபே இடம்பெறுவார் என்றும் கூறப்படுகிறது. சுழற்பந்துவீச்சாளர்களாக வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. பிரதான வேகப்பந்துவீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் பேக்அப்பாக ஹர்ஷித் ராணாவும் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Asia Cup 2025: இந்த வீரர்களுக்கு வாய்ப்பில்லை
அனைவரும் எதிர்பார்த்த சுப்மான் கில், ஜெய்ஸ்வால், குர்னால் பாண்டியா, பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெறவில்லை. அதேநேரத்தில், கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்றிருந்த ரின்கு சிங், ரமன்தீப் சிங், நிதிஷ் குமார் ரெட்டி, துருவ் ஜுரேல், ரவி பிஷ்னோய், முகமது ஷமி ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் நிதிஷ்குமார் ரெட்டி மட்டுமே காயத்தால் அவதிப்பட்டு வருவதாக என்பது குறிப்பிடத்தக்கது. இவை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வரவில்லை என்பதால் இதில் மாற்றம் இருக்கவும் வாய்ப்புள்ளது.
Team India Squad: இந்திய அணி ஸ்குவாட் (கணிப்பு)
அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா.