செயிண்ட் கிட்ஸ்,
கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் செயிண்ட் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியாட்ஸ் – டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற செயிண்ட் கிட்ஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நைட் ரைடர்ஸ் அணி தொடக்க ஆட்டக்காரர் ஆன காலின் முன்ரோவின் அபார சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன காலின் முன்ரோ 120 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 47 ரன்களும் அடித்தனர். மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன் அடிக்கவில்லை.
பின்னர் 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய செயிண்ட் கிட்ஸ் அணிக்கு முதல் 3 வரிசை பேட்ஸ்மேன்களான கைல் மேயர்ஸ் (32 ரன்கள்), பிளெட்சர் (41 ரன்கள்), ரிலீ ரோசோவ் (38 ரன்கள்) ஆகியோர் சிறப்பாக ஆடி வலு சேர்த்தனர். இதன் மூலம் அந்த அணி இலக்கை நெருங்குவது போல் தெரிந்தது.
இருப்பினும் மிடில் ஓவர்களில் நைட்ரைடர்ஸ் அணியின் உஸ்மான் தாரிக் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிடில் ஆர்டரில் ஜேசன் ஹோல்டர் (44 ரன்கள்) தவிர மற்ற செயிண்ட் கிட்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் தாக்குப்பிடிக்கவில்லை. முடிவில் 20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய செயிண்ட் கிட்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் தரப்பில் உஸ்மான் தாரிக் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். காலின் முன்ரோ ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.