கிரிக்கெட் உலகின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், தனது தனிப்பட்ட வாழ்க்கையின் ஒரு முக்கிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். பிரபல தொழிலதிபர் ரவி காய் என்பவரின் பேத்தியான சானியா சண்டோக் என்பவருடன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக வெளியான செய்தி, சமூக ஊடகங்களில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த செய்தி, அர்ஜுனின் தனிப்பட்ட வாழ்க்கையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததுடன், ஒரு கிரிக்கெட் வீரராக அவரது வருமானம் மற்றும் சொத்து மதிப்பு குறித்த ஆர்வத்தையும் தூண்டியுள்ளது. சச்சின் டெண்டுல்கரின் சொத்து விவரம் அனைவரும் அறிந்ததே, ஆனால் அவரது மகன் அர்ஜுனும் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் மூலம் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளார் என்பது பலருக்கும் புதிய தகவல்.
அர்ஜுன் டெண்டுல்கரின் வருமானம் மற்றும் சொத்து மதிப்பு
அர்ஜுன் டெண்டுல்கரின் முக்கிய வருமான ஆதாரமாக இந்தியன் பிரீமியர் லீக் உள்ளது. 2021 ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள அவர், தனது ஐபிஎல் ஒப்பந்தங்கள் மூலம் இதுவரை மொத்தம் ரூ. 1.4 கோடி சம்பாதித்துள்ளார். 2021 ஆம் ஆண்டில், மும்பை அணி அவரை ரூ. 20 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது. பின்னர், 2023 ஆம் ஆண்டில் அவரது ஒப்பந்த மதிப்பு ரூ. 30 லட்சமாக உயர்ந்தது.
ஐபிஎல் தொடரை தவிர, இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளிலும் அர்ஜுன் ஒரு முக்கிய வீரராக வலம் வருகிறார். கோவா அணிக்காக ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே டிராபி மற்றும் சையத் முஷ்டாக் அலி டி20 போன்ற தொடர்களில் அவர் பங்கேற்று வருகிறார். இந்த உள்நாட்டு போட்டிகளில் விளையாடுவதன் மூலம், அவர் ஆண்டுக்கு சுமார் ரூ. 10 லட்சம் வரை வருமானம் ஈட்டுகிறார். ஐபிஎல் சம்பளம், உள்நாட்டு போட்டி வருமானம் மற்றும் பிற சொத்துக்களை கணக்கில் கொண்டால், அர்ஜுன் டெண்டுல்கரின் நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ.22 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வாழ்க்கை
இடது கை வேகப்பந்து வீச்சாளரும், கீழ் வரிசையில் பேட்டிங் செய்யும் திறன் கொண்டவருமான அர்ஜுன், தனது திறமையால் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க போராடி வருகிறார். அவர் கோவா அணிக்காக விளையாடி வருகிறார், இது அவரது கிரிக்கெட் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியுள்ளது. இதுவரை ஃபர்ஸ்ட்-கிளாஸ் தொடரில் 17 போட்டிகளில், 37 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 532 ரன்களையும் எடுத்துள்ளார். மேலும் லிஸ்ட் ஏ (ஒருநாள் போட்டி) தொடரில் 18 போட்டிகளில், 25 விக்கெட்டுகளையும், 102 ரன்களையும் எடுத்துள்ளார். டி20யில் 24 போட்டிகளில், 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2023 ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். அந்த சீசனில் நான்கு போட்டிகளில் விளையாடி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஆடம்பர வாழ்க்கை
சச்சின் டெண்டுல்கரின் மகன் என்பதால், அர்ஜுன் ஒரு ஆடம்பரமான வாழ்க்கை முறையை கொண்டுள்ளார். அவர் தனது தந்தைக்கு சொந்தமான மும்பை மாளிகையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த பிரம்மாண்டமான வீட்டை சச்சின் 2007 ஆம் ஆண்டில் ரூ.39 கோடிக்கு வாங்கினார். அர்ஜுன் திருமணம் செய்யவிருக்கும் சானியா சண்டோக்கின் குடும்பமும் மும்பையின் செல்வாக்கு மிக்க குடும்பங்களில் ஒன்றாகும். அவரது தாத்தா ரவி காய் உணவு துறைகளில் புகழ்பெற்றவர். புகழ்பெற்ற இன்டர்காண்டினென்டல் ஹோட்டல் மற்றும் புரூக்ளின் கிரீமரி பிராண்ட் ஆகியவை இவர்களுக்கு சொந்தமானவை. இந்த திருமணம், விளையாட்டு மற்றும் வணிக துறையை சேர்ந்த இரண்டு முக்கிய குடும்பங்களின் இணைவாக பார்க்கப்படுகிறது.
About the Author
RK Spark