சுபான்ஷு சுக்லாவின் வரலாற்று விண்வெளி திட்டம் தொடர்பாக மக்களவையில் இன்று சிறப்பு விவாதம்

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையின் செயலகம் வெளியிட்டு உள்ள கொள்கை குறிப்பில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற முதல் இந்தியர் மற்றும் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான விண்வெளி திட்டத்தில் முக்கிய பங்கு என்ற தலைப்பில் சிறப்பு விவாதம் ஒன்று இன்று நடைபெறும் என தெரிவித்து உள்ளது.

இந்த குறிப்பிடத்தக்க விவாதத்துடன், 2 முக்கிய மசோதாக்கள் மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளன. மத்திய மந்திரி பியூஷ் கோயல், ஜன் விஷ்வாஸ் (திருத்த) மசோதா, 2025-ஐ இன்று தாக்கல் செய்கிறார். இதேபோன்று, இந்திய மேலாண்மை மையங்கள் (திருத்த) மசோதா, 2025-ஐ மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தாக்கல் செய்ய உள்ளார்.

41 ஆண்டுகளில் விண்வெளிக்கு சென்று திரும்பிய முதல் இந்தியர் என்ற பெருமையை இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா (வயது 39) பெற்றுள்ளார். அவர், கடந்த ஜூன் 25-ந்தேதி, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றார். அமெரிக்காவை சேர்ந்த ஆக்சியம் ஸ்பேஸ் என்னும் தனியார் நிறுவனத்தின் ‘ஆக்சியம்-4’ திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பயணத்தில், சுக்லாவுடன் பெக்கி விட்சன், திபோர் கபு மற்றும் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி ஆகியோரும் இணைந்து கொண்டனர்.

அவர்கள் 4 பேரும் விண்வெளியில் 18 நாட்கள் வரை தங்கி, பயிர்கள் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டனர். இவர்களுடைய ஆராய்ச்சி பணி நிறைவடைந்ததும், கடந்த ஜூலை 15-ந்தேதி பூமிக்கு திரும்பினர். விண்கலம், வடஅமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் பசிபிக் பெருங்கடலை ஒட்டி உள்ள கலிபோர்னியாவின் நீண்ட கடற்கரையில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

இந்நிலையில், சுக்லா நேற்று இந்தியாவுக்கு திரும்பியுள்ளார். டெல்லி விமான நிலையத்தில் நேற்று அதிகாலை வந்திறங்கிய சுக்லாவை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணை மந்திரி ஜிதேந்திரா சிங், டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா உள்ளிட்டோர் வரவேற்றனர். சுக்லாவின் மனைவி காம்னா சுக்லாவும் அவரை வரவேற்க சென்றார். சுபான்ஷு சுக்லா, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான விண்வெளி வீரர்களில் ஒருவர் ஆவார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.