இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உட்பட எட்டு அணிகள் விளையாடும் ஆசிய கோப்பை தொடர் அடுத்த மாதம் துபாயில் தொடங்குகிறது. கிட்டத்தட்ட ஒரு மாதம் நடைபெறும் இந்த தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றனர். இந்திய அணி ஆசிய கோப்பைக்காண 15 பேர் கொண்ட அணியை இன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிக பெரிய எதிர்பார்ப்பில் இந்த தேர்வு உள்ளது, காரணம் அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பைக்காண அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்பதை இந்த தேர்வு கிட்டத்தட்ட உறுதி செய்துவிடும்.
பிசிசிஐ அறிவிப்பு
அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழு 15 பேர் கொண்ட வீரர்களை இன்று தேர்வு செய்ய உள்ளனர். மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமை அலுவலகத்தில் அஜித் அகர்கர், கௌதம் கம்பீர் மற்றும் சூரியகுமார் யாதவ் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட உள்ளனர். இந்த அணியில் யார் யார் இடம் பெறுவார்கள்? யார் யார் இடம் பெற மாட்டார்கள்? என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் முன்னாள் தேர்வு குழுவின் தலைவர் ஸ்ரீகாந்த் ஐபிஎல்லில் கலக்கிய வைபவ் சூர்யவம்சியை அணியில் கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
14 வயது வீரர் வைபவ் சூர்யவம்சி
14 வயதே ஆகும் வைபவ் சூர்யவம்சி தற்போது இந்தியா முழுவதும் பேசப்படும் ஒரு வீரராக மாறி வருகிறார். காரணம் ஐபிஎல் 2025-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய அவர் 35 பந்துகளில் சதம் அடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். இந்த ஆண்டு மெகா ஏலத்தில் அவரது பெயர் இடம் பெற்ற போதே தலைப்புச் செய்திகளில் இடம் பிடிக்கத் தொடங்கிய வைபவ் சூர்யவம்சி இந்த சதத்திற்கு பிறகு முக்கியமான ஒரு வீரராக மாறியுள்ளார். இதனை தொடர்ந்து U 19 அணியில் இடம் பெற்ற அவர் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடி இருந்தார். மேலும் U 19 அணியில் வரவிருக்கும் ஆஸ்திரேலியா தொடரிலும் வைபவ் சூர்யவம்சி இடம் பெற்றுள்ளார்.
இந்த சிறு வயதிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள வைபவ் சூர்யவம்சி இந்திய அணியில் இடம் பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியில் நிலவி வருகிறது. “நீங்கள் சில அசாதாரணமான முடிவுகளை எடுக்க வேண்டும். எதற்காகவும் காத்திருக்க தேவையில்லை, அவர் சிறுவனாக இருப்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம், தனது திறமையை அவர் ஏற்கனவே நிரூபித்துள்ளார். தன்னுடைய அதிரடியான பேட்டி மூலம் பந்து வீச்சாளர்களை திணறடிக்கிறார். நான் தேர்வு குழுவின் தலைவராக இருந்தால் அவரை நிச்சயம் அணியில் எடுப்பேன்” என்று ஸ்ரீகாந்த் தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியுள்ளார்.
மேலும் பேசிய அவர், “நான் தேர்வு குழுவில் இருந்தால் சஞ்சு சான்சனை எடுக்க மாட்டேன். என்னுடைய முதல் தேர்வாக அபிஷேக் ஷர்மா மற்றும் வைபவ் சூர்யவம்சி இருப்பார்கள். இவர்களை தாண்டி சாய் சுதர்சன் அல்லது சுப்மான் கில்லை எடுப்பேன். வைபோ சூர்யவம்சியை அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பைக்கு நான் எடுப்பேன். வைபோ சூர்யவம்சி, எஸ் எஸ் வி ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்சன் இடையே தான் போட்டியிருக்கும். இவர்களைத்தான் நான் எனது அணியில் எடுப்பேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
About the Author
RK Spark