ஆசிய கோப்பை: அந்த ஆல்பார்மட் வீரர் கண்டிப்பாக இடம்பெற வேண்டும்.. ஏனெனில் – ஹர்பஜன் சிங்

மும்பை,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியன் இந்தியாவுடன் பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-2 இடத்தை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந்தேதி துபாயில் சந்திக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற வீரர்களுக்கு இடையே கடும்போட்டி நிலவுகிறது. அவர்களில் இருந்து 15 பேர் கொண்ட சிறந்த அணியை தேர்வு செய்வது தேர்வாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் சுப்மன் கில், சமீபத்தில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அசத்தலாக செயல்பட்டு 4 சதங்கள் அடித்தார். அவரை ஆசிய கோப்பையில் தேர்வு செய்ய வேண்டும் என பல முன்னாள் வீரர்கள் கூறிவருகின்றனர். இருப்பினும் அவர் டி20 போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவதால் அவரை தேர்வு செய்ய தேர்வுக்குழு தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

ஏனெனில் சஞ்சு சாம்சன் – அபிஷேக் சர்மா தொடக்க ஜோடியாக களமிறங்கி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அவர்களை மாற்ற தேர்வுக்குழு விருப்பம் காட்டவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆல் பார்மட் வீரரான சுப்மன் கில்லை ஆசிய கோப்பையில் தேர்வு செய்ய வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் நீண்ட இன்னிங்ஸ்களை விளையாடி அணியைக் காப்பாற்றக்கூடிய பேட்ஸ்மேன்களும் தேவை என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கான காரணம் குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுவது மட்டும் முக்கியம் கிடையாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவேளை சுப்மன் கில் அதிரடியாக விளையாட முடிவெடுத்தால் மற்றவர்களைப் போல அவராலும் அதிரடியாக விளையாட முடியும். ஏனெனில் மிகவும் திடமான வீரரான அவரிடம் வலுவான அடிப்படை இருக்கிறது. இவ்வளவு வலுவான அடித்தளத்தைக் கொண்ட ஒரு பேட்ஸ்மேன் எந்த வடிவத்திலும் ரன்கள் எடுக்க முடியும்.

ஐ.பி.எல்.-ஐ பார்த்தால், சுப்மன் ஒவ்வொரு சீசனிலும் ரன்கள் எடுத்துள்ளார். அவர் ஆரஞ்சு தொப்பியையும் வென்றுள்ளார். அது தற்செயலாக நடக்காது. மேலும் அவரால் 120 – 130 ஸ்ட்ரைக் ரேட்டில் மட்டுமல்ல, 160 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பேட்டிங் செய்ய முடியும். ஆம், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா போன்ற வீரர்கள் நம்மிடம் உள்ளனர்.

ஆனால் அதற்காக நீங்கள் சுப்மன் கில்லை குறைத்து மதிப்பிட முடியாது. அவர் எந்த வடிவத்திற்கும் ஏற்றவாறு மாற்றியமைக்கக்கூடிய மிகவும் திறமையான பேட்ஸ்மேன். அவர் ஆல் பார்மட் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) வீரர். என் கருத்துப்படி, அவரால் டி20-களிலும் விளையாட முடியும். ரசிகர்களாகிய நாம் ஒவ்வொரு பந்திலும் பவுண்டரி அல்லது சிக்சரை பார்க்க விரும்புவோம். ஆனால் நீண்ட இன்னிங்ஸ்களை விளையாடி அணியைக் காப்பாற்றக்கூடிய பேட்ஸ்மேன்களும் உங்களுக்குத் தேவை” என்று கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.