வரும் செப்டம்பர் 9ஆம் தேதி ஆசிய கோப்பை தொடர் தொடங்க இருக்கிறது. 28ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இத்தொடர் ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஓமன், யுஏஇ, ஹாங்காங் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இத்தொடருக்கான அணியை முதலில் பாகிஸ்தான் அணி அறிவித்தது.
இந்த நிலையில், இன்று (ஆக. 19) இந்திய அணி அறிவித்துள்ளது. 15 பேர் கொண்ட அணியை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் அறிவித்தார். சூர்யகுமார் யாதவ் கேப்டனாக இருக்க, சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், இந்திய அணியின் தொடக்க வீரராக களம் இறங்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளன.
இந்திய அணியில் 3 தொடக்க வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், மற்றும் சுப்மன் கில் ஆகிய மூவரும் தேர்வாகி உள்ளனர். இந்த நிலையில்தான் தொடக்க வீரருக்கான குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீரை பொறுத்தவரையில், தொடக்க வீரர்களில் இடது, வலது கை காம்பினேஷனை விரும்பக்கூடியவர். இதன் காரணமாக அபிஷேக் சர்மாவின் இடத்திற்கு எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால் மறுபக்கம் இறங்கக்கூடிய பேட்டர் யார் என்பதில்தான் சுப்மன் கில் மற்றும் சஞ்சு சாம்சன் இடையே போட்டி நிலவி உள்ளது.
இந்த நிலையில், இந்திய அணியின் தொடக்க வீரராக களம் இறங்கப்போவது யார் என்ற கேள்விக்கு தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தொடக்க வீரர்கள் யார் என்பதை கேப்டன் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முடிவு செய்வார்கள். ஆசிய தொடர் தொடங்குவதற்கு முன் இந்திய அணி துபாய் செல்லும், அப்போது இது தொடர்பான முடிவு எட்டப்படும். மேலும், சுப்மன் கில் இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் மிகச்சிறப்பாக விளையாடி உள்ளார். அதேபோல் சஞ்சு சாம்சனை சிறப்பாக செயல்பட்டுள்ளார் என கூறினார்.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி: சூர்ய குமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் ரானா, ரிங்கு சிங். ரிசர்வ் வீரர்கள்: பிரசித் கிருஷ்ணா, வாசிங்டன் சுந்தர், துருவ் ஜுரேல், ரியான் பராக், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
About the Author
R Balaji