புதுடெல்லி: கடந்த 2023-ம் ஆண்டு ஜன் விஷ்வாஸ் மசோதா நாடாளுமன்றத்தின் 2 அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ஜன் விஷ்வாஸ் மசோதா 2.0 நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மசோதாவை தாக்கல் செய்து பேசினார்.
இந்த மசோதா தற்போதுள்ள சட்டங்களில் மிகச் சிறிய குற்றங்களுக்கு தண்டனை விதிக்கும் 288 விதிகளை நீக்குவதற்கு வழிவகை செய்கிறது. நேற்று மசோதா அறிமுகம் செய்யப்பட்டபோது, மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கோஷம் எழுப்பினர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பலத்த கோஷத்துக்கு இடையே மசோதாவை, மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் தாக்கல் செய்தார்.
மசோதா அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த மசோதாவை மக்களவையின் தேர்வுக் குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. மோட்டார் வாகனச் சட்டம் 1988, புதுடெல்லி நகரசபை கவுன்சில் சட்டம் 1994, சாலை போக்குவரத்துக் கழக சட்டம் 1950 உள்ளிட்ட சட்டங்களில் உள்ள பல்வேறு ஷரத்துகளை நீக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.