நாடாளுமன்றத்தில் தலைமை தேர்தல் கமிஷனரை பதவி நீக்கம் செய்ய தீர்மானம் எதிர்க்கட்சிகள் பரிசீலனை

புதுடெல்லி,

வாக்கு திருட்டு விவகாரத்தை தீவிரமாக எடுத்துள்ள எதிர்க்கட்சியினர், இந்த பிரச்சினையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து திட்டமிட்டு வருகின்றன. அந்தவகையில் நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் அறையில் நேற்று கூடிய இந்தியா கூட்டணி தலைவர்கள் இது குறித்து விவாதித்தனர். அப்போது, நேற்று முன்தினம் தலைமை தேர்தல் கமிஷனர் அளித்த பேட்டியில் வாக்கு திருட்டு தொடர்பாக தாங்கள் எழுப்பிய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு பதிலளிக்காததை சில உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். எனவே இந்த போராட்டத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும் எனக்கூறிய அவர்கள், தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவித்தனர். பின்னர் அது குறித்து கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது. இந்த பதவி நீக்க தீர்மானம் தற்போது பரிசீலனை அளவிலேயே இருப்பதாகவும், இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் மீண்டும் கூடி இது குறித்து முடிவு செய்வார்கள் என்றும் நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னர் இது குறித்து காங்கிரஸ் எம்.பி. நாசர் உசேன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘முற்றிலும் பாரபட்சமற்ற தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனே நாட்டுக்கு தேவை. நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தேர்தல் கமிஷன் எந்த பதிலும் தரவில்லை. பா.ஜனதா செய்தி தொடர்பாளர் போல தலைமை தேர்தல் கமிஷனர் பேசுகிறார்’ எனக்கூறினார். பதவி நீக்க தீர்மானம் குறித்த கேள்விக்கு, ‘தேவைப்பட்டால் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எந்த வழிமுறையையும் பயன்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்றும் தெரிவித்தார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.