நீங்கள் விராட், ரோகித்தாக இருக்கலாம்.. அதற்காக கவாஸ்கரை… – இந்திய முன்னாள் வீரர் அதிரடி கருத்து

மும்பை,

இந்திய கிரிக்கெட் கண்டெடுத்த மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் சுனில் கவாஸ்கர். டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனைக்கு சொந்தக்காரர். அப்படிப்பட்ட அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். அதில் இந்திய அணிக்காக சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர் யாராக இருந்தாலும் தயங்காமல் விமர்சிப்பார்.

அதற்கு சிறந்த உதாரணமாக பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் ரிஷப் பண்ட் மோசமான ஷாட் அடித்து அவுட்டானபோது நேரலை வர்ணனையில் ஈடுபட்டிருந்த கவாஸ்கர் அவரை ‘ஸ்டுப்பிட் ஸ்டுப்பிட்’ என்று விமர்சித்தது பரவலாக பேசப்பட்டது. அத்துடன் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற நட்சத்திர வீரர்கள் சுமாராக விளையாடியபோது பாரபட்சம் பார்க்காமல் விமர்சித்துள்ளார்.

அதேவேளை சச்சின், சேவாக், கங்குலி, விவிஎஸ் லக்‌ஷ்மண் போன்ற பல ஜாம்பவான் வீரர்கள் கவாஸ்கரிடம் ஆலோசனை பெற்ற சம்பவங்களும் முன்னர் நடந்துள்ளன. ஆனால் இன்றைய தலைமுறை வீரர்கள் அதுபோன்று எந்த ஆலோசனைகளையும் முன்னாள் வீரர்களிடம் இருந்து பெறுவதில்லை.

முன்னதாக ஐ.பி.எல். தொடரில் விராட் கோலியின் ஸ்டரைக் ரேட் குறைவாக உள்ளது என்று சுனில் கவாஸ்கர் விமர்சித்திருந்தார். அதனை ஏற்றுக்கொள்ளாத விராட் கோலி, ஒரு போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்றவுடன் கவாஸ்கரை மறைமுகமாக விமர்சித்தார். அதுபோல ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது பல சமயங்களில் சுனில் கவாஸ்கர் அவரை விமர்சித்தார். இதற்கு ரோகித் சர்மா, பி.சி.சி.ஐ.-டம் புகார் அளித்ததாக கூறப்பட்டன.

இந்நிலையில் நன்மைக்காக கவாஸ்கர் தெரிவிக்கும் விமர்சனங்களை விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அவமதிக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டுமென இந்திய முன்னாள் வீரர் கர்சன் கவுரி அதிரடியான கருத்தினை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு: “அது முட்டாள்தனமானது. நீங்கள் ரோகித் சர்மாவாகவோ அல்லது விராட் கோலியாகவோ இருக்கலாம். ஆனால் அதற்காக அவர்கள் கவாஸ்கர் எனும் சிறந்த மனிதரை மதிக்க வேண்டும். ஏனென்றால் அவர் ஏதாவது தெரிவித்தால் அது உங்களின் நலனுக்காகவே இருக்கும். ரவி சாஸ்திரி பாராட்டுவதில் திறந்த மனதுடையவர். ஆனால் விமர்சனம் என்று வரும்போது சுனில் கவாஸ்கர் முற்றிலும் வித்தியாசமாக செய்வார். சாஸ்திரியை விட அவர் வெளிப்படையாக விமர்சிப்பார்.

கவாஸ்கர் கடந்த 25 ஆண்டுகளாக வர்ணனை செய்து வருகிறார். அவரது கருத்துகள் எந்த வீரருக்கும் மிகவும் மதிப்புமிக்கவை. நமது வீரர்கள் எந்த ஆலோசனைக்காகவும் அவரிடம் செல்வதில்லை என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. வெளியில் இருந்து வரும் வீரர்கள் கூட அவரிடம் ஆலோசனை பெற செல்கிறார்கள். சுப்மன் கில் உட்பட ஒவ்வொரு இந்திய வீரரும் அவரிடம் செல்ல வேண்டும். கில் அவரிடம் சென்றாரா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் விராட், ரோகித் அல்லது கில் ஆகியோருக்கும் கவாஸ்கர் ஊடகங்களில் ஆலோசனைகளை தெரிவித்து வருகிறார்” என்று கூறினார்.

இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால் மனதார பாராட்டும் மனம் படைத்தவர் சுனில் கவாஸ்கர். எடுத்துக்காட்டாக கடந்த இங்கிலாந்து தொடரில் தம்முடைய சாதனையை உடைத்த சுப்மன் கில்லை நேரில் சந்தித்த கவாஸ்கர் தனது கையொப்பமிட்ட தொப்பி மற்றும் சட்டையை பரிசாகக் கொடுத்து ஆச்சரியப்படுத்தினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.