மும்பை,
இந்திய ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு, சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பின், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக யாரும் எதிர்பாராத விதமாக டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சியளித்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரை தேர்வு செய்ய பி.சி.சி.ஐ. தேர்வுக்குழு விரும்பவில்லை என்று தகவல்கள் வெளியான நிலையில் ஓய்வு அறிவித்து அதிர்ச்சி அளித்தார்.
இதனையடுத்து ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து விளையாட உள்ள அவர் அடுத்த உலகக்கோப்பை (2027) வரை விளையாடுவதை இலக்காக கொண்டுள்ளார். இருப்பினும் ஒருநாள் உலகக்கோப்பை வரை அவரால் பார்மில் இருக்க முடியுமா? என்பது சந்தேகம்தான்.
அத்துடன் அடுத்த ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன் ரோகித் சர்மா 40 வயதை எட்டிவிடுவார் என்பதால் அவர் உலகக்கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பிடிப்பது கடினம் என பல முன்னாள் வீரர்கள் கூறியுள்ளனர். இதனிடையே ரோகித் சர்மாவுக்கு பதிலாக சுப்மன் கில் ஒருநாள் போட்டி அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் ரோகித் சர்மாவுக்கு பின் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரை நியமிக்க வேண்டும் என முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “அவருடைய (ஸ்ரேயாஸ் ஐயர்) அசாதாரண அமைதியுடன், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சாம்பியனாக மாற்றினார். அதன்பிறகு, ஒரு இளம் பஞ்சாப் அணியை வழிநடத்தினார். ஆனால் அவருக்கு யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. அவர் ஒரு அசாதாரண கேப்டன். அவர் விரைவில் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.