Chennai Super Kings : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் வாங்க தயாராக இருப்பதாக தகவல் வெளியான நிலையில், திடீரென பிருத்திவி ஷா வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதன்மூலம் அவரை அணியில் சேர்க்க சிஎஸ்கே ஆர்வமாக இருப்பதை காட்டியுள்ளது. பிருத்திவி ஷா கடந்த ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. ஏனென்றால் அவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த அவர், உள்ளூர் போட்டியில் மும்பை அணியை விட்டு விலகி மகாராஷ்டிரா அணிக்காக விளையாடத் தொடங்கியுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் புச்சி பாபு கோப்பை தொடரில் சத்தீஸ்கருக்கு எதிரான தனது முதல் போட்டியிலேயே பிருத்வி ஷா, சதம் அடித்து அசத்தினார். சென்னை மண்ணில் நடந்த இந்தப் போட்டிக்கு பின்னர், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி பிருத்திவி ஷா பேசிய வீடியோ ஒன்றை தங்களுடைய சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டுள்ளது. இந்த பதிவுக்குப் பின்னரே பிருத்திவி ஷா சிஎஸ்கே அணியுடன் இணைவாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
பிருத்திவி ஷா வீடியோ
சிஎஸ்கே தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில், பிருத்வி ஷா பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஷா, “சென்னை எனக்கு எப்போதும் ஸ்பெஷலானது. நான் இங்கு விளையாடும் போதெல்லாம் ரன்கள் குவித்துள்ளேன். 2019-ஆம் ஆண்டு ஐபிஎல்-ல் நான் இங்கு முதன்முறையாக விளையாடியது மிகவும் சிறப்பான அனுபவம்” என்று கூறியிருந்தார். பொதுவாக, எந்தவொரு ஐபிஎல் அணியும் தங்களது வீரர் அல்லாத ஒருவரைப் பற்றிப் சோஷியல் மீடியாவில் பதிவிடுவதில்லை. ஆனால், சிஎஸ்கே-வின் இந்தப் பதிவு, ரசிகர்களுக்குள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. “சிஎஸ்கே அழைக்கின்றது, பிருத்வி சிஎஸ்கே-விற்கு வருகிறார்” என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிருத்திவி ஷா ஏலம் போகவில்லை
கடந்த சில சீசன்களாக, பிருத்வி ஷா தனது ஃபார்ம் மற்றும் ஒழுக்கமின்மை காரணமாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். ஐபிஎல் 2025 ஏலத்தில் அவர் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை. இருப்பினும், தற்போது மகாராஷ்டிரா அணிக்காக அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். 2026 ஐபிஎல் தொடருக்கு முன்பாக, சிஎஸ்கே அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், பிருத்வி ஷாவின் பெயர் சிஎஸ்கே ரசிகர்களால் அதிகம் பேசப்படுகிறது. இது வெறும் யூகமாக இருந்தாலும், ஷா மற்றும் சிஎஸ்கே இடையேயான இந்தத் தொடர்பு, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிருத்வி ஷாவின் ஆக்ரோஷமான ஆட்டம், சிஎஸ்கே-வின் தொடக்க ஆட்டக்காரர் வரிசைக்கு வலிமை சேர்க்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். எனினும், அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் வரை, இது வெறும் எதிர்பார்ப்பாகவே இருக்கும்.
சஞ்சு சாம்சனை வாங்க சிஎஸ்கே ஆர்வம் காட்டாதது ஏன்?
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் சஞ்சு சாம்சன் அந்த அணியில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளார். அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இம்முறை ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க விரும்புவதாகவும், அதனால் அணியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு ஆர்ஆர் அணியிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இதனை அறிந்த மற்ற ஐபிஎல் அணிகள் அவரை வாங்க ஆர்வமாக இருக்கின்றன. சிஎஸ்கே, கேகேஆர் அணிகள் சாம்சனை வாங்க விரும்புகின்றனர். ஆனால், ராஜஸ்தான் அணி மிகப்பெரிய டிமான்டுகளை வைப்பதால், சாம்சனை எந்த அணியும் டிரேடிங் மூலம் வாங்க ஆர்வம் காட்டவில்லை. அவர் பெயர் ஏலத்தில் வரும்போது வாங்கிக்கொள்ளலாம் என காத்திருக்கின்றன.
About the Author
S.Karthikeyan