மெக்காய்,
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் 84 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இவ்விரு அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது. இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா களம் இறங்கவில்லை. அவருக்கு பதிலாக எய்டன் மார்க்ரம் அணியை வழிநடத்தினார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்து அசத்திய பவுமா 2வது போட்டியில் களம் இறங்காதது பேசு பொருளானது. இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் அவர் களம் இறங்காததற்கான காரணம் வெளியாகி உள்ளது.
அதாவது, ஜூன் மாதம் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போது ஏற்பட்ட தொடை தசைப்பிடிப்பில் இருந்து மீண்ட பிறகு, தனது பணிச்சுமையை சமாளிக்க அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய பவுமா எந்த அசவுகரியத்தையும் காட்டவில்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.