இனி இந்திய அணிக்கு சுப்மான் கில் மட்டுமே கேப்டன்… இந்த வீரர்களுக்கு ஆப்பு!

India National Cricket Team: இந்திய கிரிக்கெட் அணி தற்போது மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி பயணித்து வருகிறது எனலாம். இந்திய டி20ஐ மற்றும் டெஸ்ட் அணிகள் ஏற்கெனவே பெரிய மாற்றத்தை சந்தித்துவிட்டன.

Team India: மொத்தமாக மாறும் இந்திய அணி

2024இல் டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு டி20ஐ-இல் இருந்து விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஓய்வை அறிவித்ததை தொடர்ந்து, இந்திய டி20ஐ அணி பெரியளவில் மாற்றத்தை கண்டது. டி20ஐ கேப்டன்ஸியும் சூர்யகுமார் யாதவ் வசம் சென்றது. இந்தியாவில் வரும் 2026இல் நடைபெறும் டி20 உலகக் கோப்பை வரை அவர் கேப்டனாக நீடிப்பார். 

அதன்பின், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி தொடங்கும் முன்னரே விராட் கோலி, ரோஹித் சர்மா டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வை அறிவித்தனர். சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் கடந்த டிசம்பரில் நடந்த ஆஸ்திரேலியா தொடரின் பாதியிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால், தற்போது இந்திய டெஸ்ட் அணியிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. எனவே, அடுத்த குறி இந்திய ஓடிஐ அணிதான்.

Team India: ஓடிஐ அணிதான் அடுத்த டார்கெட்

ஆனால், ஓடிஐ அரங்கில் இன்னும் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வை அறிவிக்கவில்லை. அவர்கள் 2027ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை வரை விளையாடுவார்களா என்ற கேள்வியும் இருக்கிறது. அதுமட்டுமின்றி, தற்போது 38 வயதான ரோஹித் சர்மாதான் ஓடிஐ அணியின் கேப்டனாகவும் நீடிக்கிறார். எனவே, வரும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது ஓடிஐ கேப்டனாக ரோஹித் தொடர்வாரா அல்லது வேறு யாரும் நியமிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Shreyas Iyer: ஷ்ரேயாஸ் ஐயருக்கு கேப்டன்ஸியும் கிடையாது

இது ஒருபுறம் இருக்க, தற்போது ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய டி20 அணி ஸ்குவாட் தேர்வு பெரும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது. சுப்மான் கில்லை அணிக்குள் கொண்டுவந்தது மட்டுமின்றி அவருக்கு துணை கேப்டன் பொறுப்பையும் வழங்கியிருக்கிறது பிசிசிஐ. ஆனால், சமீபத்தில் மிரட்டலான ஃபார்மில் இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயரை ஓரங்கட்டியிருப்பது பெரும் கேள்விகளை எழுப்பியது. 

இதையடுத்து, ஷ்ரேயாஸ் ஐயரை ஓடிஐ கேப்டனாக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த தகவல்கள் முற்றிலும் தவறும் என்றும் அப்படி எந்த விவாதமும் நடைபெறவில்லை என்றும் பிசிசிஐ மறுத்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, “எனக்குத் தெரிந்தவரை அப்படி ஒரு திட்டம் இல்லை. இதுபோன்ற செய்திகள் முற்றிலும் தவறானவை” என்றார். இதன்மூலம், பிசிசிஐ ஷ்ரேயாஸ் ஐயரை ஓடிஐ அரங்கிலும் கேப்டனாக நியமிக்காது என தெளிவாகி உள்ளது. 

Shubman Gill: இனி இந்திய அணிக்கு இவர் மட்டுமே கேப்டன்

மேலும் டெஸ்ட் கேப்டன்ஸியை சுப்மான் கில் பெற்றுவிட்டார். டி20ஐ பொருத்தவரை தற்போதைய துணை கேப்டன்ஸியும் அவரிடமே உள்ளது, டி20 உலகக் கோப்பை முடிந்ததும் கேப்டன்ஸி அவரிடமே வந்துவிடும். ஓடிஐயை பொருத்தவரை கடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சுப்மான் கில்தான் துணை கேப்டனாகவும் செயல்பட்டார். எனவே, ஒருவேளை ரோஹித் சர்மா கேப்டன்ஸி பொறுப்பை துறந்தாலும், அடுத்து அதுவும் சுப்மான் கில் கைகளுக்கே செல்லும். அந்த வகையில், மூன்று பார்மட்டிலும் ஒரே கேப்டன் என்ற வழிமுறையை பிசிசிஐ மீண்டும் கையில் எடுப்பதை பார்க்க முடிகிறது. இதனால், ரோஹித் சர்மா, ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேலுக்கு கேப்டன்ஸி வாய்ப்பில்லை எனலாம்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.