பெங்களூரு,
கர்நாடக சட்டசபையில் நடந்த கூட்டத்தொடரின்போது, ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் எதிர்க்கட்சியான பா.ஜ.க.வினரின் கேள்விக்கு பதிலளித்து பேசினார். அப்போது, நான் காங்கிரசில் வளர்ந்தவன். உங்களுக்கு எப்படி பதில் அளிக்க வேண்டும் என்று எனக்கு தெரியும் என்றார்.
அதற்கு, எதிர்க்கட்சி தலைவரான ஆர். அசோக், டி.கே. சிவக்குமாரிடம் நீங்கள் ஒரு முறை ஆர்.எஸ்.எஸ். சீருடை அணிந்திருந்தீர்கள் அல்லவா? என்றார். இதனை கேட்டதும் சிரித்த டி.கே. சிவக்குமார், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கீதம் எனப்படும் ‘நமஸ்தே சத வத்சலே மாத்ருபூமே….’ என தொடங்கும் வரிகளை பாடினார்.
இதனால், எதிர்க்கட்சிகள் வரிசையில் சலசலப்பு ஏற்பட்டது. அவர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர். ஆளும் காங்கிரஸ் கட்சியினரோ அமைதியாக இருந்தனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கான கீதத்தின் வரிகளை அவர் பாடுவது போன்ற 73 விநாடிகள் ஓட கூடிய வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆர்.எஸ்.எஸ். கீதம் நாடு முழுவதும் உள்ள ஆர்.எஸ்.எஸ். கிளைகளில் பாடப்படுவது வழக்கம்.
இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, தலைவர்கள் என்றால் அவர்கள் எதிர்க்கட்சியினரை பற்றியும் அறிந்திருக்க வேண்டும். நான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் வரலாற்றை பற்றி அறிய முயற்சிக்கிறேன். அவர்களுக்கும், எங்களுக்கும் கொள்கை ரீதியாக நிறைய வேறுபாடுகள் உள்ளன. நான் பிறவியிலேயே ஒரு காங்கிரஸ்காரன். ஒருபோதும் பா.ஜ.க.வில் சேரமாட்டேன் என கூறினார்.
இதற்கு முன்பு அவர் கூறும்போது, பெங்களூருவில் உள்ள ராஜாஜி நகரில் பள்ளி சிறுவனாக இருந்தபோது, ஆர்.எஸ்.எஸ். கிளைகளில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.