மனதளவில் நொறுங்கி போனேன் – ஓய்வு குறித்து அஸ்வின் சொன்ன முக்கிய தகவல்!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரும், டெஸ்ட் கிரிக்கெட்டின் ஜாம்பவான்களில் ஒருவருமான ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியா தொடர் நடைபெற்று கொண்டிருந்த போது, திடீரென அனைத்து வித கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின்போது எடுக்கப்பட்ட அவரது இந்த திடீர் முடிவுக்கான காரணம் என்னவென்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்த நிலையில், தற்போது முதன்முறையாக ஓய்வு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் அஸ்வின். இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உடனான ஒரு நேர்காணலின் போது, தனது ஓய்வு முடிவு குறித்து உண்மையான காரணத்தை அஸ்வின் தெரிவித்துள்ளார்.

அஸ்வின் சொன்ன உண்மை சம்பவம்!

ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் “குட்டி ஸ்டோரீஸ்” என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோடில், இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நேர்காணலில் டிராவிட் அஸ்வினிடம், “திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற என்ன காரணம்?” என்று கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு மிகவும் உணர்வுப்பூர்வமாக அஸ்வின் பதிலளித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. நேர்காணலில் அஸ்வின் கூறியதாவது, “இந்திய அணிக்காக வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு செல்லும்போது, பெரும்பாலான போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. 

அணியில் இடம்பிடித்தும், ஆடும் லெவனில் இல்லாமல் தொடர்ந்து வெளியே உட்கார வேண்டிய நிலை ஏற்பட்டது. இது ஒரு வீரனாக எனக்கு மனதளவில் மிகப்பெரிய பாதிப்பையும், வலியையும் கொடுத்தது. தொடர்ந்து திறமையை நிரூபித்தும், வாய்ப்புக்காக வெளியே காத்திருப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது,” என்று வேதனையுடன் பகிர்ந்துள்ளார். மேலும் அஸ்வின் கூறுகையில், “அணியுடன் பயணம் செய்து, விளையாட வாய்ப்பில்லாமல் சும்மா வெளியே உட்கார்ந்திருப்பதற்கு பதிலாக, அந்த நேரத்தை என் குழந்தைகளுடன் வீட்டில் செலவழிக்கலாமே என்ற எண்ணம் எனக்குள் ஆழமாக எழுந்தது. குடும்பத்துடன் இருப்பது மனதிற்கு நிம்மதியை தரும் என்று தோன்றியது. அந்த எண்ணத்தின் அடிப்படையில்தான் ஓய்வு முடிவை எடுத்தேன்,” என்று கூறினார்.

ஐபிஎல் தொடரில் விளையாடும் அஸ்வின்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், கிரிக்கெட் மீதான தனது காதலை அஸ்வின் கைவிடவில்லை. அவர் தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும், ஐபிஎல் போன்ற டி20 லீக் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுடன் அஸ்வின் ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், அவரது ரசிகர்களுக்கு இந்த செய்தி சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்தியாவின் வெற்றிகரமான டெஸ்ட் பந்து வீச்சாளர்களில் ஒருவரான அஸ்வின் இன்னும் சிறிது காலம் விளையாடி இருக்கலாம் என்பதே பலரின் விருப்பமாக உள்ளது.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.