இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடது கை சுழற்பந்து வீச்சாளரான பிரக்யான் ஓஜா, வரவிருக்கும் ஆசிய கோப்பை 2025 தொடரில் இந்திய அணிக்காக தொழில்நுட்பக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்திய சீனியர் ஆண்கள் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கும் அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு வருவதால், இந்திய கிரிக்கெட்டிற்கு மீண்டும் பங்களிக்கவுள்ளார் பிரக்யான் ஓஜா.
Pragyan Ojha is likely to be included in BCCI Men’s selection panel. pic.twitter.com/aXQhFLDZAz
— Cricbuzz (@cricbuzz) August 22, 2025
தொழில்நுட்பக் குழுவில் ஓஜா!
ஆசிய கோப்பை தொடரை சுமூகமாகவும், விதிகளுக்குட்பட்டும் நடத்துவதில் தொழில்நுட்ப குழுவின் பங்கு மிக முக்கியமானது. இந்த குழுவின் உறுப்பினராக, பிரக்யான் ஓஜா முக்கிய பொறுப்புகளை வகிக்க உள்ளார். அதன்படி, போட்டி நடைபெறும் போது எழும் சர்ச்சைகள் மற்றும் பிரச்சனைகளை விசாரித்து, உரிய முடிவுகளை எடுப்பதில் உதவுவார். தொடரின் நடுவே, காயங்கள் அல்லது பிற காரணங்களுக்காக அணிகள் கோரும் மாற்று வீரர்களுக்கு ஒப்புதல் அளிப்பது அல்லது நிராகரிப்பது குறித்து முடிவெடுப்பார். நடுவர்கள் மற்றும் இதர போட்டி அதிகாரிகளை நியமிக்கும் பொறுப்பும் இந்த குழுவிற்கு உண்டு. ஆசிய கோப்பை தொடர், கிரிக்கெட் விதிகளின்படி நடைபெறுவதை இந்த குழு உறுதி செய்யும். இந்த போட்டியில் பங்கேற்கும் 8 நாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள் இந்த குழுவில் இடம்பெறுவார்கள். இதில், இந்தியாவின் பிரதிநிதியாக பிரக்யான் ஓஜா செயல்படுவார்.
தேர்வுக்குழு உறுப்பினர்?
தொழில்நுட்ப குழு நியமனத்துடன் பிரக்யான் ஓஜா, இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் இடம்பெறவும் அதிக வாய்ப்புள்ளது. தெற்கு மண்டலத்தின் தேர்வாளரான எஸ். சரத் அவர்களின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அந்த இடத்திற்கு பிரக்யான் ஓஜா நியமிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு பிசிசிஐ சில தகுதிகளை நிர்ணயித்துள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர் குறைந்தது 7 டெஸ்ட் போட்டிகள் அல்லது 10 ஒருநாள் போட்டிகள் அல்லது 20 முதல் தர போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று குறைந்தது 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். மேலும், பிசிசிஐ-யின் எந்தவொரு கிரிக்கெட் குழுவிலும் 5 ஆண்டுகளுக்கு மேல் உறுப்பினராக இருந்திருக்க கூடாது.
பிரக்யான் ஓஜா
பிரக்யான் ஓஜா இந்தியாவிற்காக 24 டெஸ்ட், 18 ஒருநாள் மற்றும் 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் 108 முதல் தர போட்டிகளில் ஆடிய அனுபவம் உள்ளது. அவர் தனது கடைசி சர்வதேச போட்டியில் நவம்பர் 2013-ல் விளையாடினார். எனவே, பிசிசிஐ-யின் அனைத்துத் தகுதி விதிகளையும் அவர் பூர்த்தி செய்கிறார். விளையாட்டு வீரராக மட்டுமின்றி, நிர்வாகத்திலும் பிரக்யான் ஓஜா அனுபவம் வாய்ந்தவர். அவர் இதற்கு முன்பு, ஐபிஎல் நிர்வாக குழுவிலும், இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் பிரதிநிதியாகவும் பணியாற்றியுள்ளார். இந்த அனுபவம், அவரது புதிய பொறுப்புகளுக்குப் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் மற்றும் அஜய் ராத்ரா ஆகியோரின் பதவிக்காலம் சமீபத்தில் நீட்டிக்கப்பட்ட நிலையில், தெற்கு மண்டலத்திற்கான ஓஜாவின் நியமனம், தேர்வுக்குழுவில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
About the Author
RK Spark