Rinku Singh Love Story: எளிமையான பின்னணியில் இருந்து வந்து, தற்போது இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக, அதிரடி வீரராக உருவெடுத்துள்ளார். 27 வயதான ரிங்கு சிங் நாட்டின் எளிய பின்னணி கொண்ட இளைஞர்களுக்கு பெரிய ஊக்கமளிப்பவராக திகழ்கிறார் எனலாம்.
Rinku Singh: ரிங்கு சிங்கின் விடாமுயற்சியும், வளர்ச்சியும்…
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து ரிங்கு சிங் விளையாடி வந்தாலும், 2023ஆம் ஆண்டில்தான் அவர் கேகேஆர் அணியின் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்து, 14 லீக் போட்டிகளையும் விளையாடியிருந்தார். அதற்கு முன் 4 சீசன்களையும் சேர்த்தே அவர் 17 போட்டிகளில் தான் விளையாடியிருந்தார். மேலும், 2023ஆம் ஆண்டில்தான் ரிங்கு சிங் இந்திய அணிக்காக டி20 மற்றும் ஓடிஐயில் அறிமுகமானார்.
2018ஆம் ஆண்டில் இருந்து 2021ஆம் ஆண்டுவரை கேகேஆர் அவருக்கு ரூ.80 லட்சத்தை சம்பளமாக கொடுத்து வந்தது, அதுவே 2022ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை ரூ.55 லட்சமாக குறைந்தது. ரிங்கு சிங்கின் உச்சபட்ச ஃபார்மை தொடர்ந்து, 2025 மெகா ஏலத்தில் ரூ.13.5 கோடி கொடுத்து கேகேஆர் தக்கவைத்தது. இதன்மூலமே அவரின் விடாமுயற்சியையும், விஸ்வரூப வளர்ச்சியையும் நீங்கள் தெரிந்துகொள்ள முடியும்.
Rinku Singh: ஆசிய கோப்பை அணியில் ரிங்கு சிங்
இப்போது வரை 33 டி20ஐ போட்டிகளிலும், 2 ஓடிஐ போட்டிகளிலும் இந்தியாவுக்காக ரிங்கு சிங் விளையாடிவிட்டார். அவரின் ஃபார்ம் சற்று சரிந்திருப்பதால் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி சமீபத்தில் எழுந்தது. ஆனால் அவரின் முரட்டுத்தனமான ஆட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து ஆசிய கோப்பை தொடரின் 15 பேர் கொண்ட இந்திய அணி ஸ்குவாடில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா என்பது வேறு கதை.
Rinku Singh: ரிங்கு சிங் – பிரியா சரோஜ் நிச்சயதார்த்தம்
அவரின் கிரிக்கெட் வாழ்க்கை உச்சம்பெறும் இந்த காலகட்டத்தில் அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறார். சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவரும், மச்லிஷஹர் மக்களவை தொகுதியின் இளம் எம்.பி.,யுமான பிரியா சரோஜ் என்பவரை ரிங்கு சிங் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். கடந்த ஜூன் மாதம் 8ஆம் தேதி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் 26 வயதான பிரியா சரோஜ் உடன் ரிங்கு சிங்கிற்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இதை அடுத்து வரும் நவம்பரில் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்பட்ட நிலையில், திருமணம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை.
View this post on Instagram
Rinku Singh Love Story: பிரியா சரோஜ் அறிமுகமானது எப்படி?
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் ரிங்கு சிங் சமீபத்தில் அளித்த பேட்டியில் பிரியா சரோஜ் அறிமுகமானது எப்படி, தங்களுக்குள் காதல் மலர்ந்தது எப்படி என்பது குறித்து பேசியிருக்கிறார். அதில், ” ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தபோது, கரோனா காலகட்டத்தில் 2022ஆம் ஆண்டில்தான் அவர் அறிமுகமானார். அப்போது எனக்கு சமூக வலைதளத்தில் Fan Page இருந்தது. அந்த பக்கத்தில், கிராமத்தில் ஏதோ வாக்களிப்பது தொடர்பான பிரியாவின் புகைப்படங்கள் சில இருந்தன.
பிரியாவின் சகோதரிதான் அந்த புகைப்படங்கள், வீடியோக்களை எடுத்து வந்துள்ளார். அவர் எனது Fan Page நிர்வாகிகளிடம் அந்த புகைப்படங்களை பகிர்ந்துகொள்ள இயலுமா என்ற கேட்டிருக்கிறார், அதன் பெயரில் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. நான் அந்த புகைப்படத்தை பார்த்தேன். பார்த்த உடன் அவரை பிடித்து போய்விட்டது. எனக்கு சரியானவராக இருப்பார் என தோன்றியது. அவருக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும் என நினைத்தேன். ஆனால் அது சரியாக இருக்காது என விட்டுவிட்டேன்” என்றார். இப்படிதான் பிரியா சரோஜ், ரிங்கு சிங்கிற்கு அறிமுகமாகி உள்ளார்.
Rinku Singh Love Story: காதல் மலர்ந்தது எப்படி?
அதற்கு பிறகு எப்படி பிரியாவிடம் பேசினார் என்பது குறித்து ரிங்கு சிங் கூறுகையில், “எனது சில புகைப்படங்களை அவர் லைக் செய்திருந்தார். அதன் பிறகே நான் இன்ஸ்டாகிராமில் அவருக்கு மெசேஜ் அனுப்பினேன். அப்படிதான் எல்லாம் தொடங்கியது. அதன்பின் நாங்கள் பேச தொடங்கினோம். ஓரிரு வாரத்தில் தொடர்ந்து பேசத் தொடங்கிவிட்டோம். போட்டிக்கு முன்னரும் பேசவோம். எனக்கு 2022ஆம் ஆண்டில் இருந்தே காதல் வந்துவிட்டது” என்றார்.
View this post on Instagram
Rinku Singh Love Story: ‘இப்போது பேசுவது குறைந்துவிட்டது’
ரிங்கு சிங் காதலிக்க தொடங்கிய பின்னரே, 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பிரியா சரோஜ் போட்டியிட்டு எம்பி.,யாக தேர்வானார். ஆனால் பிரியா எம்.பி.,யாக தேர்வான பின்னரும் தங்கள் உறவுக்குள் எந்த மாற்றமும் இல்லை என்கிறார் ரிங்கு சிங். “பெரிய மாற்றம் ஏதும் எங்களுக்குள் நடக்கவில்லை. ஆரம்பத்தில் நாங்கள் அதிகமாக பேசி வந்தோம். அது தற்போது குறைந்திருக்கிறது… அவ்வளவுதான்” என்கிறார்.
மேலும், “அவருக்கு (பிரியா) அவர் செய்யும் பணி மிகவும் பிடிக்கும். கிராமத்திற்கு போவது, அங்குள்ள மக்களுடன் உரையாடுவது, அவர்களுக்கு உதவிப் புரிவது… மேலும் நாடாளுமன்றம் நடக்கிறது… அவர் அரசியல்வாதி என்பதால் இந்த களப்பணிகள் அனைத்தும் அவருக்கு முக்கியம். நீங்கள் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு போய் பார்த்தால் தெரியும், அவர் எந்தளவிற்கு வேலை செய்கிறார் என்று… அவர் காலையில் எழுந்து சென்றால், வீடு திரும்ப இரவு ஆகும். எனவே எங்களுக்குள் பேச அதிக நேரம் இருக்காது. இரவு மட்டும் பேசிக்கொள்வோம்” என தனது காதல் குறித்து மனம் திறந்து பேசினார் ரிங்கு சிங்.