மும்பை,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் செப்.10-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும், 14-ந்தேதி பாகிஸ்தானையும், 19-ந்தேதி ஓமனையும் எதிர்கொள்கிறது.
ஆசிய கோப்பை போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் அதிரடி ஆட்டக்காரரான ரிங்கு சிங்கும் இடம் பிடித்துள்ளார். 2025 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள அவர் தனக்கு இந்திய அணியில் சூர்யகுமார் யாதவிடம் இருந்து அதிக ஆதரவு கிடைப்பதாக சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, சூர்யகுமார் யாதவ் எப்போதுமே என்னை ஆதரிக்கும் ஒருவராக இருக்கிறார். களத்தில் என்னை எப்போதுமே உற்சாகப்படுத்தும் அவர் களத்திற்கு வெளியேயும் பல நம்பிக்கையான வார்த்தைகளை கூறுவார். கவுதம் கம்பீர் எங்களை எவ்வாறு சுதந்திரமாக செயல்பட ஆதரிக்கிறாரோ அதேபோன்று சூர்யகுமார் யாதவும் எங்களுடைய திறனை வெளிக்காட்ட முழு சுதந்திரம் அளிக்கிறார்.
அவர் கொடுக்கும் ஆதரவில் தான் என்னால் சிறப்பாக செயல்பட முடிகிறது. நான் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவின் கேப்டன்சியின் கீழ் தான் தொடர்ச்சியாக விளையாடி வருகிறேன். என்னுடைய ரோல் என்ன? என்பது அவருக்கு நன்றாக தெரியும். அதனால் தான் தொடர்ச்சியாக எனக்கு வாய்ப்பும் கிடைத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.