கடப்பா,
உலகத்திற்கு சோறு போடும் விவசாயியின் இன்றைய நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. கடுமையாக உழைத்து, வேளாண் பணிகளை மேற்கொண்டு விளைச்சலில் கிடைத்த பொருட்களை கொண்டு விற்க சென்றால், அதற்கான போதிய விலை கிடைப்பதில்லை.
அதனால், விவசாயத்தில் முதலீடு செய்வது என்பது ஒரு சுமையாக பார்க்கப்படுகிறது. வேளாண் பணிக்கான கூலி, உரத்திற்கான விலை ஆகியவையும் உள்ளன. விளைந்த பயிர்களை விற்கும்போது, அவற்றை கொள்முதல் செய்வோரிடம் இருந்து விவசாயிக்கு சரியான விலையும் கிடைப்பது இல்லை. இதனால், முதலீடு செய்வதற்கும், அதற்கான தொகை மீண்டும் கைக்கு கிடைப்பதிலும் பெரிய லாபம் இருப்பதில்லை.
இந்த நிலையில், ஆந்திர பிரதேச மாநிலத்தின் கடப்பா மாவட்டத்தில் பெண்டிளிமர்ரி கிராமத்தில் மம்முசித்துபள்ளி என்ற பகுதியில் வசித்து வருபவர் பண்டி சந்திர சேகர்ரெட்டி. விவசாயியான இவருடைய குடும்பம் ஏழ்மையில் உள்ளது. இந்நிலையில், விவசாய பணிகளை மேற்கொள்வதற்கு அவர் தன்னுடைய மகனையும், மகளையும் ஏரில் பூட்டி உழுதுள்ளார்.
நிலத்தில் உழுவதற்கு தேவையான மாடும், டிராக்டரும் வாங்குவதற்கு அவருக்கு போதிய வசதியில்லை. இதனால், அவருடைய மகனையும், மகளையும் அந்த பணியில் ஈடுபடுத்தி உள்ளார். அவர் கூறும்போது, வேலைக்கு ஆட்களை அமர்த்தி வயலில் களைகளை எடுக்கும் பணிகளை மேற்கொண்டால், செலவு அதிகரித்து விடும். மாடுகளை கொண்டு வேலையில் ஈடுபட்டாலும் கூட அது கடன் சுமையை ஏற்படுத்தி விடும். அதனால், மகனையும், மகளையும் கொண்டு களைகளை எடுக்கும் பணியை செய்கிறேன் என கூறியுள்ளார்.
இவருக்கு உள்ள 9.5 ஏக்கர்களில் 3 ஏக்கர்களில் பயிர் செய்து வருகிறார். ஏக்கர் ஒன்றிற்கு களையெடுக்க, ரூ.1,500 செலவாகும். அந்த செலவை குறைப்பதற்காக அவர் மகனையும், மகளையும் பயன்படுத்தி கொண்டார். அவருடைய மகன் கல்லூரி மாணவன் ஆவார். மகள் பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார்.