லாகூர்,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.
இதில் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கும் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் செப்.14-ந் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினை காரணமாக இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து வருகின்றன. ஐ.சி.சி. மற்றும் ஆசிய கிரிக்கெட் வாரியங்கள் நடத்தும் தொடர்களில் மட்டுமே மோதி வருகின்றன. இதன் காரணமாக இந்த போட்டி அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது.
இதனிடையே அண்மையில் முடிவடைந்த லெஜெண்ட்ஸ் லீக் தொடரில் பாகிஸ்தானுடன் விளையாட இந்திய அணி மறுத்தது. பஹல்காம் தாக்குதல் காரணமாக, ஜுலை 20-ம் தேதி நடக்கவிருந்த இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் விளையாட இந்தியா சாம்பியன்ஸ் அணி மறுப்பு தெரிவித்தது. பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் விளையாட ஷிகர் தவான், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான், யூசுப் பதான் உள்ளிட்ட வீரர்கள் விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து லீக் போட்டி ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அரையிறுதியிலும் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோத வேண்டிய சூழல் உருவானது. அந்த போட்டியிலும் இந்திய அணி விலகியதால் பாகிஸ்தான் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
அதன் காரணமாக இந்த ஆசிய கோப்பை தொடரிலும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடுமா? என்பது மிகப்பெரிய கேள்வியாகவே இருந்ததுது. பல இந்திய முன்னாள் வீரர்கள் ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய விளையாட கூடாது என கருத்து தெரிவித்தனர்.
இந்த சூழலில் ஆசிய கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அனுமதி கொடுத்துள்ளது. ஆனால் எக்காரணம் கொண்டும் இருதரப்பு தொடர்களில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடாது என்றும் மத்திய அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாடுவதற்கான அனுமதியும் கிடையாது என்றும் அறிவித்துள்ளது. ஐ.சி.சி. மற்றும் ஆசிய கிரிக்கெட் வாரியங்கள் நடத்தும் தொடர்களில் பொதுவான இடங்களில் பாகிஸ்தான் உடன் விளையாட எந்த தடையும் இல்லை என தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இனிமேலும் பாகிஸ்தானுக்கு எதிராக இருதரப்பு தொடரில் விளையாடுங்கள் என்று இந்தியாவிடம் கெஞ்ச போவதில்லை என்று அந்நாட்டு வாரியத்தின் தலைவர் மோசின் நக்வி அதிரடியாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “இரு நாடுகளுக்கிடையே எப்போது பேச்சு வார்த்தை நடக்கிறதோ, அப்போதெல்லாம் நாங்கள் இந்தியாவுக்கு சமமாக இருப்போம் என்பதில் மிகத்தெளிவாக உள்ளோம். இனி பேச்சுவார்த்தைகளுக்காக கெஞ்ச மாட்டோம். அந்த காலம் எல்லாம் முடிந்துவிட்டது. இனி என்ன நடந்தாலும் சமத்துவத்தின் அடிப்படையிலேயே நடக்கும்” என்று கூறினார்.