புதுடெல்லி,
நாட்டின் துணை ஜனாதிபதியாக பதவி வகித்த ஜெகதீப் தன்கார் பதவி விலகிய நிலையில், அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ந்தேதி நடைபெற உள்ளது.
துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டு உள்ளார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக களமிறக்கி உள்ளன. சுதர்சன் ரெட்டி, நக்சலைட்டுகளை ஆதரிப்பவர் என உள்துறை மந்திரி அமித்ஷா பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
கேரளாவின் கொச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் இதுபற்றி பேசும்போது, ‘சுதர்சன் ரெட்டி நச்சல் பயங்கரவாதத்துக்கு உதவியவர். சல்வா ஜுடும் தீர்ப்பை வழங்கினார். அந்த தீர்ப்பு வழங்கப்படாவிட்டால், நக்சல் பயங்கரவாதம் 2020-ம் ஆண்டே முடிவுக்கு வந்திருக்கும். நக்சல் சித்தாந்தத்தால் உந்தப்பட்டு இந்த தீர்ப்பை வழங்கினார்’ என குற்றம் சாட்டினார்.
மாவோயிஸ்டுகளுக்கு எதிராக சிறப்பு போலீஸ் அதிகாரிகள் என ஆயுதம் ஏந்தி போராடிய பழங்குடியின இளைஞர்கள் சல்வா ஜுடும் உள்ளிட்ட பெயர்களில் அழைக்கப்பட்டனர். கடந்த 2011-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்த சுதர்சன் ரெட்டி, சல்வா ஜுடும் அமைப்பு சட்ட விரோதமானது என அறிவித்ததுடன், உடனடியாக அவர்கள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அப்போது, அவருடன் இருந்த நீதிபதி எஸ்.எஸ். நிஜ்ஜார் என்பவரும் சேர்ந்து இந்த தீர்ப்பை வழங்கினர்.
எனினும், அமித்ஷா பேசும்போது, இடதுசாரிகளின் அழுத்தத்தின்பேரில் சுதர்சன் ரெட்டியை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது என்றும் சாடினார். சுதர்சன் ரெட்டியை நக்சல் ஆதரவாளர் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன்னாள் நீதிபதிகள் குழு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
அவருடைய இந்த பேச்சு, சல்வா ஜுடும் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை தவறாக கூறுவது போலாகி விடும். அது துரதிர்ஷ்டவசம் வாய்ந்தது. பெயரை கூறுவது தவிர்க்கப்பட வேண்டும் என அமித்ஷாவுக்கு முன்னாள் நீதிபதிகள் 18 பேர் கொண்ட குழுவினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.
இவர்களில் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகளாக பதவி வகித்த மதன் பி. லோக்குர், ஜே. சலமேஸ்வர், குரியன் ஜோசப் உள்ளிட்டோரும் அடங்குவர். நீதிபதிகள் ஏ.கே. பட்நாயக், அபய் ஓகா, கோபால கவுடா, விக்ரம்ஜித் சென் உள்ளிட்டோர் கொண்ட குழு அதுபற்றிய கூட்டறிக்கையில் கையெழுத்து இட்டு உள்ளது.
அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு பதிலளித்து சுதர்சன் ரெட்டி பேசும்போது, இந்த தீர்ப்பை வழங்கியது தான் அல்ல. நாட்டின் உச்சபட்ச கோர்ட்டு இந்த தண்டனையை வழங்கியுள்ளது. முழுமையாக தீர்ப்பை அமித்ஷா படித்திருந்தால், அதன் விவரங்களை அவர் புரிந்திருக்க கூடும் என கூறினார்.