திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கொல்லம் கடைக்கல் பகவதி சேத்திரம், ஆட்டிங்கல் இந்திலையப்பன் கோவில் ஆகிய இடங்களில் கடந்த ஏப்ரல் மாதம் திருவிழா நடைபெற்றது. அப்போது பிரபல பின்னணி பாடகர் அலோஷி என்பவர் பாடல்களை பாடினார். அங்கு கம்யூனிஸ்டு கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப்பட்டதாக கூறி எர்ணாகுளம் மாவட்டம் மரடு பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அதில், கோழிக்கோடு தளி கோவிலில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கம்யூனிஸ்டு மாணவர் அமைப்பு பெயரை கூறி நிகழ்ச்சி நடந்தது. கோவில்களில் ஆசார நிகழ்ச்சிகளை தவிர அரசியல் உள்ளிட்ட பிற நிகழ்ச்சிகள் நடத்த கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை நீதிபதிகள் ராஜா விஜயராகவன், ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
கேரளாவில் கோவில்களில் அன்றாட நிகழ்ச்சிகள் தவிர அரசியல் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது. கோவில்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளை, கட்சி மற்றும் அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துவதை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்று திருவிதாங்கூர், மலபார், கொச்சி தேவசம்போர்டுகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மத நிறுவனங்களை துஷ்பிரயோகம் செய்யும் செயல்களை தடுக்க வகுக்கப்பட்ட 1988-ம் ஆண்டு சட்டங்களை பின்பற்றுவதை தேவசம்போர்டுகள் உறுதி செய்ய வேண்டும். பின்பற்றாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்க தேவசம்போர்டு முன் வர வேண்டும். இந்த சம்பவத்தில் கோவில்களுக்கு வழிகாட்டுதல், அறிவுரைகளை வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு தெரிவித்தது. அதற்கு கோவிலில் ஆசார நிகழ்ச்சிகள் தவிர பிற நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு ஏற்படுத்துவது சிரமமானது என்று தேவசம்போர்டுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த ஐகோர்ட்டு, தேவசம்போர்டு சட்டம் 1988-ம் ஆண்டு 3-வது பிரிவின் கீழ் கோவில்கள், அதன் சுற்றுப்புறங்களில் கட்சி மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளை நடத்த தடை செய்யப்பட்டு உள்ளதை ஐகோர்ட்டு சுட்டிக்காட்டியது.