டாக்கா,
வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் ஒரு மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை அவர் எட்டியுள்ளார். வெஸ்ட் இண்டீசில் நடந்து வரும் கரீபியன் பிரீமியர் லீக்கில் (சிபிஎல்) ஆன்டிகுவா மற்றும் பார்புடா பால்கன்ஸ் அணியில் விளையாடும் ஷகிப், கடந்த 24-ம் தேதி நடந்த ஆட்டத்தில் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வானை அவுட்டாக்கினார்.
இதன் மூலம் டி20 போட்டிகளில் 500 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டி, இந்த சாதனையை படைத்த ஐந்தாவது பந்து வீச்சாளரானார். இந்தப் போட்டியில் மொத்தம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
டி20 போட்டிகளில் 4 பந்து வீச்சாளர்கள் மட்டுமே இதற்கு முன்பு 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் 660 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
டுவைன் பிராவோ (631; வெஸ்ட் இண்டீஸ்), சுனில் நரைன் (590; வெஸ்ட் இண்டீஸ்), மற்றும் இம்ரான் தாஹிர் (554; தென்னாப்பிரிக்கா) ஆகியோர் மட்டுமே 500 விக்கெட்டுகள் கிளப்பில் இருந்தனர்.
தற்போது ஷகிப் 502 விக்கெட்டுகளுடன் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார். மேலும், டி20 கிரிக்கெட் வரலாற்றில் 7000க்கும் மேற்பட்ட ரன்களையும் 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும் எடுத்த ஒரே வீரர் இவர்தான்.