2023ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த ஆண்டு ஆசிய கோப்பை நடைபெற இருக்கிறது. அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருப்பதால், இம்முறை ஆசிய கோப்பை டி20 வடிவில் நடைபெற இருக்கிறது. வரும் செப்டம்பர் 9ஆம் தேதி இத்தொடர் தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் இத்தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தாம், ஓமன், வங்கதேசம், ஹாங்காங், ஆப்கானிஸ்தான், யுஏஇ, இலங்கை உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.
Add Zee News as a Preferred Source
கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி இத்தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. அணியை சூர்யகுமார் யாதவ் வழிநடத்த, துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். கடைசி நேரம் வரை சுப்மன் கில் அணியில் இடம் பிடிப்பாரா என்ற சந்தேகம் இருந்து வந்த நிலையில், அவருக்கு துணை கேப்டன் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் கண்டிப்பாக இந்திய அணியின் பிளேயிங் 11ல் இருப்பார் என்பது உறுதியாகி உள்ளது.
இந்த சூழலில், சுப்மன் கில் தொடக்க வீரராக களம் இறக்கப்படுவார் என்றும் அதனால், சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. மேலும், ஜிதேஷ் சர்மாவை அணியில் கொண்டு வந்து அவரை மிடில் ஆர்டரில் இறக்குவார்கள் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது கேரளாவில் நடைபெற்று வரும் கேரளா கிரிக்கெட் லீக் தொடரில் சஞ்சு சாம்சன் அசத்தலாக விளையாடி ரன்களை குவித்து வருகிறார்.
ஞாயிற்றுக்கிழமை கொச்சி அணிக்கு எதிரான போட்டியில் அவர் 51 பந்துகளில் 121 ரன்களை குவித்தார். அதேபோல், திருச்சூர் அணிக்கு எதிரான போட்டியில் 46 பந்துகளில் 89 ரன்களை குவித்து அசத்தி இருக்கிறார். இப்படி தொடர்ந்து சஞ்சு சாம்சன் ரன்களை குவித்து வருவதால், சுப்மன் கில்லுக்கு நெருக்கடி அதிகரித்திருக்கிறது. சிறப்பாக விளையாடுவதால், சஞ்சு சாம்சனை தொடக்க வீரராக நிர்வாகம் களம் இறக்க முடிவெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. சஞ்சு சாம்சனை தொடக்க வீரராக இறக்கினால், சுப்மன் கில்லை ஒன்-டவுனில் இறக்க திட்டமிடலாம். அதேசமயம் சுப்மன் கில்லை தொடக்க வீரராக களம் இறக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் அபிஷேக் சர்மாவுடன் தொடக்க வீரராக களம் இறங்கப்போவது யார் என்ற கேள்வி எழும்பி உள்ளது.
About the Author
R Balaji