எர்ணாகுளம்,
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் அருகே காஞ்சிரக்காடு பகுதியில் வெளிமாநில தொழிலாளர்கள் குடியிருப்பு உள்ளது. அங்குள்ள பகுதியில் தெருநாய்கள் கூட்டமாக நின்றவாறு, மண்ணை தோண்டியது. இதை கண்ட அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்த போது, மண்ணுக்குள் பச்சிளம் குழந்தையின் உடல் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் பெரும்பாவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அனில் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து மண்ணில் புதைக்கப்பட்டு இருந்த பெண் குழந்தையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பெரும்பாவூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து குழந்தையை புதைத்தது யார் என்பது குறித்து போலீசார் வெளிமாநில தொழிலாளர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தம்பதி என்பது தெரியவந்தது. விசாரணையில் மஜ்ரு ஷேக் (வயது 33), அவரது மனைவி ஷீலா கார்த்தூன் (32). இவர்கள் கடந்த 6 மாதத்துக்கு முன்பு பெரும்பாவூர் பகுதிக்கு வந்து கூலி வேலை செய்து வந்தனர்.
அப்போது ஷீலா கார்த்தூன் கர்ப்பமாக இருந்தார். கடந்த 24-ந் தேதி அவர் வீட்டிலேயே பிரசவித்தார். அவருக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது. பெண் குழந்தையை வளர்க்க மனமில்லாததால், பிறந்த சில மணி நேரத்திலேயே குழந்தையை தம்பதி கொன்று வீட்டின் முன்புள்ள தோட்டத்தில் குழி தோண்டி புதைத்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து தம்பதியை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீஸ் பாதுகாப்புடன் ஷீலா கார்த்தூன் உடல் நலக்குறைவால் சிகிச்சைக்காக களமச்சேரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.